Close
நவம்பர் 22, 2024 8:53 காலை

புதுக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம்.. இட நெருக்கடியின்றி அமைக்கப்படுமா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவுள்ள இடத்தை பார்வையிட்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர்

தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஒரு ஊரின் முதல் எழுத்தாக அங்குள்ள பேருந்து நிலையம் கருதப்படுகிறது. அதை வைத்துத்தான் அந்த ஊரின் சிறப்பும், நிர்வாகமும் அனைவராலும் கணிக்கப்படுகிறது.

புதுக்கோட்டையில், நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க கடந்த 1966 -ல் அப்போதைய உணவுத்துறை அமைச்சர் ப. ராமையா அடிக்கல் நாட்டினார்

. அதைத் தொடர்ந்து 19.4.1981 -ல் சுமார் ரூ 46 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆர்.எம்.வீ திறந்து வைத்தார். இதில் 60 கடைகளும், 10 -க்கும் மேல்பட்ட தினசரி வாடகை அறைகளும் மூன்று கட்டணக் கழிப்பறை கழிப்பறைகளும் அமைக்கப்பட்டன.

ஆண்டுகள் உருண்டோடியது, பேருந்து நிலையமும் சிதிலமடைந்தது. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில்  சுமார் 2.50 கோடி செலவில் பழுதுகள் சீரமைக்கப்பட்டு திறப்பு விழாக்கண்டது.

எனினும் பழைய கட்டிடங்களை புதுப்பித்தாலும், சில ஆண்டுகள் மட்டுமே பயன்கிடைத்தது. இந்நிலையில், நிதழ்ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முறையும், இந்த மாதத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்னரும் பேருந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து, கட்டிடங்களை பயன்படுத்த தகுதியின்மை சான்றளித்துவிட்டுச்சென்றனர்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புத்துக்கோட்டை உள்ளிட்ட சில நகராட்சிகளில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ. 124 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் புதுக்கோட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

இதையடுத்து பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம்:

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள எழில்நகர், ஆலங்குளம் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்காலிக பேருந்து  நிலையம் அமைக்கும் பணி ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இந்த இடத்தை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்ததும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

 இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடம் முழுவதையும் இடித்து விட்டு புதியதாக கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.18 கோடியே 90 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது பேருந்து நிலையத்தில் 72 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அப்படியே இருக்கும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெறும். தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும் தேதி பின்னர் தெரியவரும். தற்காலிக பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்த பின் புதிய பேருந்து நிலையத்தில் கட்டிடங்களை இடித்து விட்டு கட்டுமான பணி தொடங்கப்படும்  என தெரிவித்தனர்.

புதிய பேருந்து நிலையம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புதுக்கோட்டை நகரில் இருந்து  வடக்கே அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்திலோ அல்லது காரைக்குடி- திருச்சி சாலையில் உள்ள கட்டியாவயல் பகுதியிலோ புதிய பேருந்து நிலையத்தை அமைத்தால் சாலைப் போக்குவரத்து அதிகரிக்கும்.

திருவப்பூர் அருகே கட்டியாவயல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால், சென்னையிலிருந்து புதுக்கோட்டை ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நின்று செல்லும் வாய்ப்புக்கிடைக்கும். திருச்சி, விராலிமலை திண்டுக்கல் செல்லும் பேருந்துகளும், தஞ்சை மதுரை பேருந்துகளும் அங்கிருந்து இயக்கலாம்.

தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி, பொன்னமராவதி,. அரிமளம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான புறநகர் பேருந்துகளையும், நகர் பேருந்துகளையும் இயக்கலாம். மதுரையில்  உள்ளதைப் போன்ற நிலை உருவாகும்.

இதனால், பேருந்து நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடி குறைந்து போக்குவரத்து சீராக நடைபெறும். எனவே புதிய பேருந்து நிலையம் அமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்துக்கு பல லட்சங்கள் செலவழிக்க வேண்டிய நிலையில், இந்த இரண்டு பகுதிகளில் இடம் இருந்தால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top