Close
நவம்பர் 22, 2024 12:35 காலை

முனசந்தை ஊராட்சியில் காந்தி ஜயந்தி கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே முனசந்தை கிராமத்தில் அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், முனசந்தை கிராம ஊராட்சியில் உள்ள  ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோ சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது: கிராமங்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் வருடத்திற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குக்கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .

அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தி ஜயந்தி, நவம்பர்-1 உள்ளாட்சி தினம்என ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக பொதுமக்களின் கோரிக்கைகளான சாலைவசதி, குடிநீர்வசதி, மின்விளக்குவசதி, பேருந்துவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இக்கூட்டத்தில் கூட்டப்பொருட்களான, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும், கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறைகளின்; திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும்வகையில், திட்டங்களை விரிவாக எடுத்துரைத் திருந்தார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் முழு அளவில் பங்கேற்று தங்கள் பகுதி அடிப்படைத் தேவைகளை எடுத்துக்கூறி பயன்பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ், ரகுபதி.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) இளங்கோ தாயுமானவன், மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, முனசந்தை ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

(பட விளக்கம்- திருமயம் தாலூகா, அரிமளம் ஒன்றியம் முனசந்தை ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top