புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் திருமயம் போர்ட் ரோட்டரி சங்க தொடக்க விழா நடைபெற்றது.
திருமயத்திலுள்ள தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் கேஎல்.கே. ராஜாமுகமது தலைமை வகித்தார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவர் கே. கபூர், செயலாளர் பி. அன்புமணி, பொருளாளர் எம். பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் 42 பேருக்கும் ரோட்டரி பின் அணிவித்து பணியமர்த்தினார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசியதாவது:
சேவை மனப்பான்மையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஒன்றிணைந்து ரோட்டரி சங்கத்தை தொடங்கியுள்ளீர்கள். அரசு செய்வது ஒரு புறம் இருந்தாலும், அதைப் போல இது போன்ற சேவைச் சங்கங்கள் செய்யும் பணிகளுக்கு நான் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்றார் அமைச்சர் ரகுபதி.
மாவட்ட ஆளுநர் ஆர். ஆனந்தஜோதி பேசியதாவது:
ரோட்டரி சங்கம் தொடங்க குறைந்தது 20 உறுப்பினர்கள் இருந்தால் போதும். ஆனால், தொடக்கத்திலேயே 42 உறுப்பினர்கள் இணைந்துள்ளது சிறப்பு. ரோட்டரி சங்கம் உலகளாவிய சேவை அமைப்பாகும். உலகில் 200 நாடுகளில் உள்ள 40 ஆயிரம் ரோட்டரி சங்கங்களில் 12 லட்சம் பேர் உறுப்பினராக இருக்கின்றனர்.
திருமயத்தில் இந்த சங்கத்தை தொடங்கும் முயற்சிகளை முன்னெடுத்த புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் 75 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் சங்கம் என்கிற பெருமைக்குரியது.
இது மூன்றாவது மூத்த சங்கம் ஆகும். அதே போல திருமயம் போர்ட் ரோட்டரி சங்கமும் பல ஆண்டுகள் பணியாற்றி 50 100 ஆண்டுகள் நிலைத்து நின்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
இதில், காவல்துணை கண்காணிப்பாளர்ஏ. அப்துல்ரகுமான், உறுப்பினர் சேர்க்கை மாவட்ட நிர்வாகிகள் எம். மோகன்குமார், சிவாஜி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் ஜெயக்குமார், புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் ராம்பிரகாஷ், அருண், வர்த்தகர் சங்கத்தலைவர் கே. கருப்பையா, புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகி கண. மோகன்ராஜா, கவிஞர் ஆர்எம்வீ. கதிரேசன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்,
இதில், முக்கிய பிரமுகர்கள், சுப.துரைராஜா, ஜான்பீட்டர், வர்த்தகர்கள், ரோட்டரி குடும்ப உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.