தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி மாணவர்கள் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, பள்ளமான பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாநகரில் கான்வென்ட் பகுதியில் தூய அந்தோணி யார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. தூய அந்தோணியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி யாகும். இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 2000 ம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நூறாண்டுகள் கடந்த தூய அந்தோனியார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நுழைவாயில் இருந்த பள்ளி வளாகம் வரை செல்லும் பாதை கரடு முரடாகவும், மேடு பள்ளங்களாகவும் உள்ளது. தற்போது பெய்யும் மழையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
பல்வேறு பகுதிகளின் கழிவுநீர் மழை தண்ணீருடன் சேர்ந்து இப்பகுதியில் தேங்கி உள்ள மழைத் தண்ணீர் கலக்கிறது. பள்ளி மாணவர்கள் முழங்கால் அளவு இந்த அசுத்தமான தண்ணீரில் நடந்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட காரணமாகிறது.
பள்ளி நிர்வாகமும், தஞ்சை மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக கரடு முரடான ,மேடு பள்ளமான பாதையை சமதளமாக அமைத்து பள்ளி நுழைவாயில் இருந்து பள்ளி வளாகம் வரை சீர் செய்து தர பெற்றோர்கள் தஞ்சை மாநகராட்சிக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் துரை.மதிவாணன் தெரிவித்த தாவது: தஞ்சை நகரம் மாநகரமாக மாற்றப்பட்ட பிறகு தஞ்சை ஸ்மார்ட் சிட்டி நகரமாக அறிவித்து இதற்கு நிதியாக ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதுடன் பள்ளி, கல்லூரி வளாகங்கள், மருத்துவ மனை,கோவில் பாதைகளை நவீன தரத்துடன் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துதரலாம்.
தற்போது மழைக்காலம் தொடங்கி மழை பெய்து வருவதால் இது போன்ற பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்குவது சகஜமானது என்றாலும், நூற்றாண்டு கடந்த பள்ளி நிர்வாகம் வளாகத்தின் நுழைவாயில் இருந்து பள்ளி வரை சமதளமான பாதையை அமைத்து இருக்க வேண்டும்.
ஆனால் பல வருடங்களாக அப்படியே உள்ளதால் மழைத் தண்ணீரும் அதனுடன் பல்வேறு கழிவு நீரும் கலந்து விடுகின்றன.தற்போது டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவலாக காணப்படுவதால் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட சுகாதார துறையும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி, தொற்றுநோய் பரவாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை பள்ளிகளை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல் இது போன்ற மாணவர்கள் நடந்து செல்கின்ற பாதைகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.