Close
நவம்பர் 24, 2024 4:14 காலை

புத்தக வாசிப்பு புதிய உலகத்தைத் திறந்து காட்டும் அறிவை விரிவு செய்யும்…

புதுக்கோட்டை

ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் நடந்த அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவில் பேசுகிறார், பேராசிரியர் விஸ்வநாதன். உடன் முதல்வர் சேதுராமன் உள்ளிட்டோர்

புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும், அறிவை விரிவு செய்யும் என்றார் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.

ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் பாரத ரத்னா, டாக்டர் அப்துல்கலாம்  பிறந்தநாள் கூட்டம் கல்லூரி முதல்வர்                  (பொறுப்பு) முனைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், மா. மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவரும், வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன் பங்கேற்று பேசியதாவது:

கலாம் மக்கள் குடியரசுத்தலைவர் என்றழைக்கப்படுகிறார். அவருடைய எளிய வாழ்க்கை, எல்லோருடனும் எளிமையாக, இனிமையாக பழகும் தன்மை போற்றுதலுக்குரியது. சாதாரண குடும்பத்தில் பிறந்து தேசத்தின் உயரிய பதவியை அடைந்தவர் அவர்.

அவர் தன்னுடைய உயர்வுக்கு புத்தகங்களையே காரணமாகச் சொல்கிறார். “புத்தகங்கள் எப்போதுமே எனக்குத்துணையாக இருந்து வந்துள்ளன. என் கையை பிடித்து அழைத்துச் சென்று வாழ்நாள் நெடுகிலும் என்னை வழிநடத்திய நண்பர்கள் அவை. புத்தகங்கள் தோல்வி நேரங்களில் எனக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளன.

நல்ல புத்தகங்கள் எனக்கு தேவதைகளைப் போல் இருந்து வந்துள்ளன. எனவே புத்தகங்களை உங்களது நண்பர்க ளாக்கிக் கொள்ளுங்கள். என்று மாணவர்களாகிய உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறார்.

கலாம் சொல்வதுபோல புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும். அறிவை விரிவு செய்யும். எனவே புத்தக வாசிப்பை பழக்கமாக, வழக்கமாக, மரபாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார் அவர்.

முன்னதாக, ஆங்கிலத்துறைத் தலைவர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஜூலியஸ் பிரசாத் நன்றி கூறினார்.

விழா நிகழ்வுகளை தமிழ்துறைப் பேராசிரியர் முனைவர் நித்யா தொகுத்து வழங்கினார் . நிறைவாக, மாணவர்கள் கலாமின் மாணவர்களுக்கான 10 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top