Close
அக்டோபர் 5, 2024 9:53 மணி

புத்தகம் அறிவோம்.. இன்றைக்கும் ஆராய்ச்சி மணி.. 

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஒரு சிற்பி ஒரு கற்பாறையிலிருந்து வேண்டாதவற்றைச் செதுக்கி எறிகின்றான், சிற்பம் வந்துவிடுகிறது. கீரையைச் சமைக்கும்போதுகூட வேண்டாதவற்றை கழித்துவிட்டுத் தானே சமைக்கிறோம்.

களத்துமேட்டிலே அறுவடை செய்த நெல்மணிகளைத் தூற்றிவிட்டுப் பதர்களை விலக்கிவிட்டுத்தானே, நெல் மணிகளை எடுத்துச் செல்கிறோம். அது போலத்தான் எழுத்தாளனும், செதுக்கி விட்டு, களைந்து விட்டு, புடைத்து விட்டு, தேவையானவற்றை எழுதவேண்டும். “எழுத்தாளனின் இலக்கு எது? “கட்டுரையில்(பக்.18).

பேரா. தி.ராஜகோபாலன் அவர்கள், தினமணி நடுப்பக்கத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே” இன்றைக்கும் ஆராய்ச்சி மணி  நூல்.இந்த நூலில் 27 கட்டுரைகள் உள்ளன.

எழுத்தாளர்கள் எப்படி இருக்க வேண்டும், சிங்கப்பூரை லீ குவான் யூ கட்டி எழுப்பியது எப்படி?நீதி கட்சியின் மனித நேயம்,காந்தி, நேரு, நேதாஜி உறவு,மதுவினால் விளையும் தீமைகள்,காந்தியின் உயர் குணங்கள்,மலாலா நோபல் பரிசு பெற்றது, தைப் பூசத்தின் சிறப்பு,சாதி உணர்வால் நேரும் கொடுமைகள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் யாவும்.

ஒவ்வொரு கட்டுரையை படிக்கும்போதும் பல புத்தகங்களைப் படித்த உணர்வே நமக்கு மேலிடுகிறது. சமூகம், வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியே ஒவ்வொரு கட்டுரைகளும் இருக்கிறது.

“பேராசிரியரின் கட்டுரைகள் ஒரு முறை வாசித்து உடனடியாக உன் வாங்கிக் கொள்ளக் கூடியவையல்ல. பலமுறை வாசித்து அவற்றில் உள்ள தகவல்களைத் தாண்டி, வாழ்க்கைச் சாரத்தை உறிஞ்ச வேண்டியவை. நிறைய மெனக்கெட்டு, வாசகர்களின் அறிவின் அடர்த்தியை உயர்த்த நினைக்கும் அவர் பாராட்டுக்குரியவர் என்கிறார் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் வெ. இறையன்பு.வானதி வெளியீடு.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top