Close
மே 20, 2024 4:53 மணி

புத்தகம் அறிவோம்.. உச்சாடனம்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- உச்சாடனம்

பூகோளத்தில் முதலிடம் புரோட்டா கடையில் “இது தினமணி பெட்டிச் செய்தி. இதைப் பார்த்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுரையிலிருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பூகோளப் பாடத்தில், +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் இரண்டாவது இடமும் பெற்ற, இரவு நேரத்தில் புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டு பகலில் பள்ளி சென்று படித்த, அந்த மாணவனை தேடி அழைத்து வருமாறு சொல்கிறார்.

அதிகாரிகளும் தேடி மதுரை ஒத்தக்கடையில் ஒரு புரோட்டாக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மாணவனை கண்டுபிடித்து முதல்வரிடம் கொண்டு சேர்க்கின்றனர். அந்த மாணவன் பெயரில் அவனுடைய கல்விக்காக ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியாக வழங்கப்படுகிறது.

அந்தமாணவனுக்கு லயோலா கல்லூரி இலவசமாக மேலே படிப்பதற்கும், விடுதியிலும் இடம் கொடுக்கிறது. விளைவு அந்த மாணவன் தற்போது ஆந்திராவில் IAS அதிகாரியாக இருக்கிறார். பெயர் வீரபாண்டியன்.

இதில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒரு சிறிய பெட்டிச் செய்தி ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றி இருக்கிறது என்பது. இரண்டாவது அதைப் பார்த்த முதல்வரின் செயல்பாடு.

கலைஞரைப் பற்றி கனிமொழி M.P. , “உலகத்திலேயே இரண்டு பேர்தான் செய்தித்தாள்களை முழுமையாகப் படிப்பவர்கள். ஒருவர் proof reader , மற்றவர் தலைவர் கலைஞர் ” என்று சொல்லுவார்.படிப்பது மட்டுமல்ல அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பதற்கும் முயற்சிப்பார்.

ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. நான், 54 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் கிடக்கும் ஒரு மீன் கடையைத் திறக்கச் சொல்லி, இந்த புத்தக அறிமுகம் போல், 150 நாட்கள் தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்தேன்.

சீமான் சொல்வது போல் “வாய்ப்பே இல்ல ராஜா” என்று இதுவரை திறக்கப்படவில்லை. அது போல 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட பேரங்குளம் பாழாப் போவது, அரசு முன் மாதிரிப் பள்ளிக்கு சாலை – இவையெல்லாம் தினமணி, இந்து தமிழ் , Indian Express, புதுகை வரலாறு நாளிதழ்களில் எல்லாம் கூட செய்திகளாகவும் வந்திருக்கின்றன. இன்று வரை ஒரு பயனுமில்லை.

ஆனால், தன்னிடம் விவகாரமாக ஒருவர் கேள்வி கேட்டதற் காக ஒரு செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேறி, “இனி கோவையில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்” என்று சொல்லிச் சென்ற கலைஞர், பின்னர் அந்த செய்தியாளர் எழுதிய பல செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து தீர்வு காணப்பட்ட செய்திகளைச் சொல்லும் நூலே இந்த “உச்சாடனம் “.  கேள்வி கேட்டவர் இதன் ஆசிரியர் கா.சு.வேலாயுதன். இந்தக் கேள்விக்குப் பிறகு வேலாயுதன் கலைஞரை சந்திக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலில் தான் கேட்ட கேள்வி, அதற்கு கலைஞர் தந்த பதில், செய்தியாளர் சந்திப்பை விட்டு வெளியேறி, பின்னர் கோவை வந்த போது எல்லாவற்றையும் மறந்து இயல்பானது, தனது செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து தீர்வுகண்டது, தான் எழுதிய கடிதத்திற்கு தவறாமல் பதில் எழுதியது என்று பல சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் வேலாயுதன்.

வேலாயுதன் தமிழகத்தின் முன்னணி தினசரி, வாரப் பத்திரிக்கைகளில் செய்தியாளராக பணியாற்றியவர். தற்போது முழு நேர எழுத்தாளராக மாறியுள்ளார்.இந்த நூலை பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் யாவரும் வாசிக்க வேண்டும்.

கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் இத்தருணத்தில் அவரிடம் இருந்த, பத்திரிக்கை வாசிப்பு அதனையொட்டி அவர் தீர்வு காணும் குணாம்சத்தை கழக உடன்பிறப்புகள் உள் வாங்கிக் கொள்வது கட்சிக்கும், மக்களுக்கும் பயன் தரும். வெளியீடு-கதை வட்டம்,கோயம்புத்தூர்.99944 98044-
ரூ.150.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top