புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 5, 6 தேதிகளில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் யாத்திரைக்கு முறைப்படி காவல்துறையில் கடிதம் கொடுத்துவிட்டோம், அவர்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் யாத்திரை நடைபெறும் என்றார் மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
வரும் நவ. 6, 7 தேதிகளில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் யாத்திரை நிகழ்ச்சி புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, இலுப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற வுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் அளிக்கச் சென்றோம்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும் அவரைச் சந்திக்க இயலவில்லை. பின்னர் அலுவலகத்தில் அந்தக் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார்கள். எங்களுக்கு எந்தப் பதிலும் இதுவரை சொல்லவில்லை.
நாங்களே அழைத்து கேட்டபோது துணைக் காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி விட்டதாக சொன்னார் கள். அவர் தொலைபேசியில் கிடைக்க வில்லை. காவல்துறை அனுமதி தந்தாலும், தராவிட்டாலும் யாத்திரை நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும்.
மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் பாஜக கொடிக் கம்பங்கள் வைக்கப்படும் என மாநிலத் தலைவர் அறிவித்த படி, புதன்கிழமை கறம்பக்குடி பகுதியில் 25 இடங்களில் கொடி மரங்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தோம்.
காவல் துறை அனுமதி மறுத்துவிட்டார்கள். மாநிலத் தலைவரின் யாத்திரை நிகழ்ச்சி இருப்பதால், இப்போதைக்கு கொடிமரங்கள் வைக்கும் வேலை ஒத்தி வைக்கிறோம். மீண்டும் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் பாஜக கொடி மரங்கள் வைக்கப்படும் என்றார் விஜயகுமார்.