சென்னை, திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான வி.காமராஜ் (33) கடந்த அக்.26 -ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஆர்.விவேகானந்தன். இவரது மகன் காமராஜ் (33) மாநகராட்சி, மின்சாரம், பொதுப்பணித் துறை உள்ளிட்டவை களில் ஆர்.வி. எஞ்சினியரிங் என்ற பெயரில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கடந்த அக்.26 வியாழக்கிழமை காலை அருகில் உள்ள சின்ன எர்ணாவூர் பூம்புகார் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் திடீரென காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். உடற்கூறு பரிசோதனைக்குப்பிறகு அக்.27-ஆம் தேதி காமராஜுவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு எர்ணாவூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இக்கொ லைச் சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார்.
கடலூர் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்:
பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக அமைக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் முக்கிய பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் குற்றவாளி களைக் கண்டுபிடிப்பதில் காவல் உயரர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர தேடுதல் பணி நடைபெற்று வந்தது. ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் காமராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய எண்ணூர் நேரு நகரைச் சேர்ந்த மணவாளன் (31), இதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (32) ஜேசன் என்ற இளந்தமிழன் (23) அரவிந்தன்(24), எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த கார்த்திக் (24) எண்ணூரை சேர்ந்த ஜமாலுதீன் (28) ஆகிய 6 பேரும் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
இதில் மணவாளன் ஏற்கெனவே கடலூர் சிறை அதிகாரி வீட்டில் வெடி குண்டு வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில்தான் பிணையில் வெளி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சரணடைந்த 6 பேரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். எண்ணூரில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டட ஒப்பந்தப் பணியை காமராஜ் மேற்கொண்டு வந்ததாகவும், இதில் தங்களுக்கு மாமூல் தரவேண்டும் என மிரட்டல் விடுத்தும் காமராஜ் பணம் தராததே இக்கொலைக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
சரணடைந்த 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் நீதிமன்றத்தில் எண்ணூர் போலீஸார் மனுத்தாக்கல் செய்துள் ளனர். காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற பிறகுதான் கொலைக்கான முழுமையாகத் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.