Close
நவம்பர் 22, 2024 3:55 காலை

தமிழ்நாடு உருவான 67 -ஆவது ஆண்டு தொடக்க நாள் உறுதி ஏற்பு

தஞ்சாவூர்

தமிழ்நாடு உருவான நவம்பர் 1ஆம் தேதி 67 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள், இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கப்பட வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு உருவான 67 வது ஆண்டு தொடக்க நாள் நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு உருவான நவம்பர் 1ஆம் தேதி 67 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.

இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச்செயலாளர் ராவணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம் . வடிவேலன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் மு.முருகையன்,

நிர்வாகி சதா.முத்துக்கிருஷ்ணன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் வ.பிரேம்குமார், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநகர செயலாளர் ஐ.தமிழ், எழுத்தாளர் சாம்பான், போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன்,  நிர்வாகி டி.கஸ்தூரி, விவசாய சங்க நிர்வாகிகள் துரை . சீனிவாசன், பி.ஜோதிவேல், ஜானகிராமன், ஆசிரியர் ஓய்வு லூர்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில், நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா,கர்நாடகா என்று நாட்டின் அனைத்து மாநிலங்களும் மொழிவழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது .

இந்த அடிப்படையில், நவம்பர் 1 -ஆம் தேதி சென்னை மாகாணம் என்ற பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனபெயர் சூட்டப்பட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அதற்கு பிறகு வந்த திராவிட முன்னேற்ற கழக அரசு சென்னை மாகாணத்திற்கு பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்யும் வடக்கு எல்லை, தெற்கு எல்லைப் போராட்டங் கள் நடைபெற்றன. இந்த எல்லைப் போராட்டங்களை ம.பொ.சிவஞானம், பொதுவுடமை கட்சி தலைவர் ஜீவா, மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் முன்னின்று நடத்தி எல்லைகளை பாதுகாத்தனர். தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றிய அரசு தேசிய இனங்க ளின் மீதான அடக்குமுறைகள், ஒடுக்கு முறைகள், மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, தாய்மொழி புறக்கணிப்பு என்று செயல்பட்டு வருகிறது.

தாய்மொழி தமிழ் மீது இந்தி, சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பறிக்கப்பட்டு வரும் உரிமைகளை மீட்டுடெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும், அரசியல் சாசனம் எட்டாவது பிரிவில் உள்ளவாறு மாநிலங்களுக்கான மொழி வளர்ச்சி நிதி சமமாக பிரித்து அளிக்கப்பட வேண்டும், 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புகள் கைவிடப் பட வேண்டும், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழ் மொழி நிர்வாக மொழியாக அறிவிக்க வேண்டும் ,வேலை வாய்ப்பு கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற உயர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை மருத்துவம் உள்ளிட்டு அனைத்தும் தமிழ் மொழி களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் , தமிழ்நாட்டில் மத்திய,மாநில, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே என்ற கோரிக்கைகள் ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கப்பட்டது .

முடிவில் தாய்மொழி தமிழை பாதுகாப்போம், தமிழ் பண்பாடு,கலாசாரத்தை உயர்த்தி பிடிப்போம், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டுடெடுப்போம், அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஆதரிப்போம் என்று நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top