Close
நவம்பர் 22, 2024 7:59 காலை

சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள் குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்: சீமான்

சென்னை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

வருமானவரித்துறை,  அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள் சொத்துக்கள் குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்   தெரிவித்தார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டல செயலாளர் ஆர். கோகுலின் தந்தையார் ரங்கராஜன் அண்மையில் மறைந்ததையொட்டி அவரது திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது.
 இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மறைந்த ரங்கராஜனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.
அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்திய நிலையில் தற்போது ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடுகளில் கடந்த இரண்டு நாள்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் . ஜெகத்ரட்சகன் திடீரென பணக்காரர் ஆனவர் என்று கூறி விட முடியாது. திமுகவினர் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.
கடந்த காலங்களில் சோதனைகள் நடைபெற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. எனவே சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள், ரொக்க தொகை உள்ளிட்டவை குறித்து விவரங்களை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
திமுகவினர் வீடுகளில் மட்டும் சோதனைகள் நடைபெறுவது ஏன்?  அதிமுகவினர் யாரும் ஊழலில் ஈடுபடவில்லையா? ஊழல் பணத்தில் தான் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் போடப்படுகின்றன.  பாஜக அல்லாத மாநில அரசுகள் மீது மத்திய அரசு முகமைகள் மூலமாக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. எனவே அரசியலுக்காகவே இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பதுதான் எதார்த்தமானது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கூலிப்படையினர் மூலம் நடைபெறும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கொலையாளிகள் மூன்றே மாதங்களில் பிணையில் வெளிவந்து விடுகின்றனர். மீண்டும் மீண்டும் பழைய குற்றவாளிகளே கொலையாளிகளாக இருக்கின்றனர்.
எனவே இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படையினரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
நீட் தேர்வு பிரச்னையில் திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ் கட்சியோடு  திமுக கூட்டணியாக இருந்த போது தான் நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு திமுக தான் காரணமாக இருந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தற்போது திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் என்பது ஒரு கபட நாடகம் என்பதில் ஐயமில்லை.
தேர்தலுக்குத் தேர்தல் ஏராளமான இலவச திட்ட வாக்குறுதி களை அள்ளி வீசி தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருகிறது.  இலவசத் திட்டங்களால் தமிழகம் சீரழிந்து வருகிறது. தற்போது இந்த இலவச திட்டங்கள் அனைத்து மாநிலங் களிலும் கட்சிகள் பேதமின்றி தேர்தல் வாக்குறுதிகளாக பரவி வருகிறது வருகிறது. இதைத்தான் திமுக திராவிட மாடல் அரசு என்று கூறுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.  அனைத்து இலவச திட்டங்களை யும்  தவிர்க்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை.
கொடிக்கம்பங்களுக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம் கூடாது:
பாஜக கொடிக்கம்பங்களை நடுவதில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர் .
ஒரு கட்சியின் அடையாளமாகத்தான்  கொடி கம்பங்கள் உள்ளன.  அப்படி கொடிக்கம்பங்கள் தேவையில்லை என அரசு முடிவு எடுத்தால் அனைத்து கொடிக்கம்பங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்.  இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நாம் தமிழர் கட்சியும் தங்களது கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு தயாராக உள்ளது என்றார் சீமான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top