Close
நவம்பர் 22, 2024 1:53 காலை

கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்கும் முடிவுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

தஞ்சாவூர்

தஞ்சையில் கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்கப்படும்! தஞ்சாவூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை

கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்கப்படும் என்ற முடிவுக்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா வெண்டையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்க்கு சொந்தமான நிலங்களில் 89 விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து குத்தகையை இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதால் குத்தகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் சம்பா பயிர்காப்பீடு செய்ய விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது குத்தகை பாக்கி உள்ளதால் சிட்டா-அடங்கல் தர வேண்டாமென கோயில் நிர்வாகம் கூறிவிட்டதால் சிட்டா அடங்கல் தர முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு எதிர்வரும் 20-11-2023 அன்று காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்  என அறிவித்திருந்தது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிட்டா-அடங்கல் தர ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து,விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்பிடம் நேரடியாக முறையிட் டனர். ஆட்சியர் எடுத்த  நடவடிக்கை அடிப்படை யில் சனிக்கிழமை 18.11.2023  மாலை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் எம்.ரவிச்சந்திரன் (பொறுப்பு-உதவி ஆணையர் கலால்,கூடுதல் ஆட்சியர்) தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், திருக்கோவில் செயல் அலுவலர் கோ.சிவராஜா, செங்கிப்பட்டி சரக ஆய்வாளர் ஜெயபாரதி, வெண்டையம்பட்டி கிராம நிர்வாக அலுவலர்  எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் இரா.முகில், நிர்வாகிகள் எஸ்.சுப்பிரமணியன், எம்.அய்யாராசு, வீ.ராமமூர்த்தி, பி.மாரியய்யா, விவசாய பிரதிநிதிகள் பி.முருகேசன்,எஸ்.அம்பலராஜ், கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து சாகுபடி பாதித்ததால்,கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களின் குத்தகை பாக்கியை தற்போது செலுத்த இயலாது எனவும், பயிர் காப்பீடு செய்ய குறுகிய காலமே உள்ளதால், சிட்டா அடங்கல் உடனே வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலோடு ஏற்கப்பட்டு திங்கட்கிழமை காலை முதல் சிட்டா-அடங்கல் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. பிரச்னை அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுத்து சிட்டா அடங்கல் வழங்க உத்தரவிட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.

பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர், பூதலூர் வட்டாட்சியர், வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பயிர் காப்பீடு பிரச்னை யின் அவசரத்தை உணர்ந்து போராட்ட நடவடிக்கை எடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி உள்ளிட்ட அனைவருக்கும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top