Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகால தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பாக சுருக்கியதை கைவிடவும், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவும்,

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்யவும் ,மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறவும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் ஏழை எளிய உழைக்கின்ற மக்களை பாதிக்கின்ற விலைவாசி உயர்வுகளை, கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வுகளை முறைப்படுத்திடவும், வங்கி,ரயில்வே, விமானம்,துறைமுகம், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி சாலை , மின்சாரம், போக்குவரத்து,

பொது விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்கின்ற மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை கைவிடவும், பொதுத்துறை நிறுவனங்களை விற்று தேசிய பண மயமாக்கும் கொள்கையை கைவிடவும்,

கட்டுமானம் உடல் உழைப்பு உள்ளிட்ட பல்வேறு நல வாரியங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி மேம்படுத்திடவும் ,நல உதவிகளை விரைந்து வழங்கிடவும், அரசு மற்றும் பொது துறைகளில் பணிபுரிய அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறைகளில் ஆட்கள் நியமிப்பதை கைவிடவும், அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைவருக்கும் மாத சம்பளம் ரூபாய் 26,000 நிர்ணயம் செய்திடவும்,

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அனைவருக்கும் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மூன்று நாட்கள் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று இன்று முடிவடைகிறது.

நாடு தழுவிய முற்றுகை போராட்டத்திற்கு மாநில தொழிற்சங்கங்கள் முடிவின்படி அனைத்து மாவட்ட தலைநகரங் களிலும் மாநிலம் தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்த அடிப்படையில் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு இன்று மாலை 4 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், ஐ என் டி சி மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ், ஏ ஐ சி சி டி யூ மாவட்ட செயலாளர் கே. ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மாடாகுடி செல்வராஜ், விவசாய சங்க தலைவர்கள் ஆர். ராமச்சந்திரன், பி. செந்தில்குமார், ஆகியோர் பேசினார்கள் .

ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் வெ.சேவையா,கே.அன்பு, பேர்நீதி ஆழ்வார்,பாஸ்டின், காளிமுத்து, சசிரேகா, தி.கோவிந்தராஜன், ஏ.ரவிச்சந்திரன், ஏ ராஜா, முத்துகிருஷ்ணன் என்.குருசாமி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top