Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

மழைநீர் கால்வாய்களை விரைவாகக் கட்டி முடிக்காததே வெள்ளத்திற்கு முக்கிய காரணம்: எடப்பாடி கே.பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை

திருவொற்றியூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சனிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாதவரம் வி.மூர்த்தி, கே.குப்பன் உள்ளி்ட்டோர் உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்த் திட்டத்தை விரைவாகக் கட்டி முடிக்காததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

மிக்ஜாம் புயலால் வடசென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். துறைமுகம் தொகுதியில் அமைப்புச் செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி சுமார் 2 ஆயிரம் பேருக்கு சேலை, வேட்டி, போர்வை, ரொட்டி, உணவுப்பொட்டங்களை வழங்கினார்.

பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து திருவொற்றியூர் கார்கில் வெற்றி நகரில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பழனிசாமி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பகுதி செயலாளருமான கே.குப்பன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் மழை வெள்ளத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் உணவு, பால், தண்ணீர் இன்றி பெரும்பாலானவர் அவதியடைந்தனர். வெள்ளம் சூழ்ந்ததால் தேங்கிய மழைநீருக்கு மத்தியில் எவ்வித உதவிகளும் கிடைக்காம் வீடுகளுக்குள்ளேயே லட்சக் கணக்கான மக்கள் முடங்கியிருந்தர்.

புயல் மற்றும் கனமழையைச் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்ததை நம்பியே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபடவில்லை. இந்த நம்பிக்கைதான் மக்களை வெள்ளத்தில் சிக்கவைத்தது.  சென்னை மாநகரில் 2,400 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதே 1,240 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பதவி ஏற்ற பிறகு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் இத்துறையின் அமைச்சராக இருப்பவர் ஒப்பந்ததாரர்களிடம் திட்டத்தைச் செயல்படுத்துவற்கு பேரம் பேசினார் என்பதும், இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை உறுதியாக குற்றச்சாட்டாகவே வைக்கிறேன்.

மழை நீரை அகற்றுவதில் மோட்டார் பம்புகளை ஏற்பாடு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பாதிப்பில் சுமார் ரூ.800 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தில் பயிரப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 400 ஏக்கரில் நெற்பயிர் வெள்ளத்தில் சிக்கிச் சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மாவட்டங்களில் சுமார் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் இப்புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார் பழனிசாமி.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா. வளர்மதி, மாதவரம் வி.மூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் நா.பாலகங்கா, ராயபுரம் ஆர்.மனோ, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.குப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top