Close
நவம்பர் 21, 2024 4:18 மணி

தஞ்சையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்… 718 பேருக்கு பணி வாய்ப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியர் தீபக்ஜேக்கப்

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப்  தலைமையில்  நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,  தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர்  உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைவேந்தர் முனைவர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  கடந்த 12.08.2023 அன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலை கல்லூரி மற்றும் 07.10.2023 அன்று கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆகிய முகாம்களில் நடைபெற்றுள்ள சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 228 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இம்முகாம்களில், 5278 மனுதாரர்கள் கலந்து கொண்டு 718 மனுதாரர்களை பணிநியமனங்களைப் பெற்று பயனடைந்துள்ளனர் .

இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான Sparton Groups of Company, Apolo Health Care, The Innovative Groups PSG Pumps, ITC, Maharaja Silks, 5k cars care போன்று முன்னணி நிறுவனங்கள்  உட்பட 147 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள். நாசிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 3257 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந் துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களில் 12 மாற்றுத்திறனாளிகள் உட்பட 543 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 522 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும் 73 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப் பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது .

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த மாதம் வரை 2,46,933 வேலை நாடுநர்கள் பதிவு செய்து ள்ளனர். இதில் 1,35,725 பெண் பதிவுாரங்கள் மற்றும் 1,11,208  ஆண் பதிவுதாரர்கள் ஆவர்.

அரசு துறையில் உள்ள பணிக்காலியிடங்கள் போட்டித் தேர்வுகள் வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் வாயிலாக அரசு வேலைவாய்ப்பு பெற தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் இன்றுவரை 265 நபர்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் உள்ளனர். இதில், கடந்த மாதத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியி டப்பட்ட தொகுதி-4 பணிக்காலியிடத்திற்கு இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி பெற்ற 15 மாணவர் கள் தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group II/IIA தேர்விற்கு வார நாட்களிலும் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு வார இறுதி நாட்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெறும் தகுதித் தேர்விற்கு வார நாட்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அனைவரும் கண்டிப்பாக  தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன்,  வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் எஸ்.சாந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கமலா மற்றும் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top