கடந்த தீபாவளி அன்று ஒரே நாளில் பலநுாறு கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது தமிழக அரசின் மாபெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. தினமும் சராசரியாக மதுபானங்களின் விற்பனை 300 கோடி ரூபாய் ஆக உள்ளது.
ஜாதி, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களிலும், திருவிழாக்காலங்களிலும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜாதி, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களில் மதுபான விற்பனையில் மதுரை மண்டலம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
மதுவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் ஒருபுறமும் அரசு மதுபானங்களின் விற்பனையினை அதிகரிக்க தேவை யான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் சமூக இளைஞர்கள் இளம் வயதில் மதுவின் பிடியில் சிக்குகின் றனர். இதனால் ஒரு சமுதாயமே சரியப்போகிறது என உளவியல் ஆர்வலர்கள் பதைபதைக்கின்றனர். இதற்கான காரணங்களை விரிவாக காணலாம்.
மதுஅருந்துபவர்கள் அதற்கு கூறும் காரணங்கள் என்ன?: மனஅழுத்தம், பணியிடங்களில் பிரச்னை, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், குறைந்த மனோ தைரியம், வாழ்க்கை சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள முடியாத சூழல், மனதை கட்டுப்படுத்த முடியாத நிலைமை, குடும்ப சூழல், நண்பர்களின் வலியுறுத்தல்,
சமூக சூழல், குடும்ப துயரங்கள், அன்பின் இழப்புகள் என மது அருந்துபவர்கள் பல காரணங்களை சொல்கின்றனர். மது அருந்துவது உடலுக்கும், மனதிற்கும் தீங்கு என்பது மது அருந்தும் அத்தனை பேருக்கும் தெரியும். தெரிந்தும் வளர் இளம் பருவத்திலேயே 50 சதவீதம் பேர் ‛மதுபோதையில்’ சிக்கிக் கொள்கின்றனர்.
மது அருந்துவது சரியா? தவறா?: மது அருந்துவது தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அத்தனை உலக நாடுகளிலும் மதுப்பழக்கம் இருக்கும் போது, தமிழகத்தில் விற்பது தவறா என்ற வாதமும் எழுந்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்கள் மதுப்பழக்கத்தில் ஒருவித ஒழுங்குமுறையினை கடைபிடிக்கின்றனர். அது என மதுஅருந்துவதில் ஒழுங்கு என்கிறீர்களா.
இது தொடர்பாக மனோதத்துவ மருத்துவர் கூறியதாவது: ஒருவர் எவ்வளவு மது அருந்தலாம் ‛‛ரெஸ்பான்சிபிள் டிரிங்கிங்’ என்று என்ஐஏஏஏ என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் குறியீடு ஒன்றை வைத்துள்ளது. இந்த கணக்குப்படி ஒருவர் வாரத்திற்கு 14 யூனிட் (அலகுகள்) முதல் 21 யூனிட் வரை மது அருந்தலாம். ஒரு யூனிட் என்பது 25 மி.லி., வாரத்திற்கு ஒருநபர் 525 மி.லி., மது அருந்தலாம். ஒருமுறை மது அருந்தும் போது அதாவது 21 யூனிட் மது அருந்த 2 மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த அளவிற்கு மதுவை சிறிது, சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை மது அருந்திய பின்னர் அடுத்த முறை மது அருந்த 48 மணி நேரம் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஆக ஒரு நபர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் மது அருந்தலாம். அதுவும் ஒருமுறைக்கு அதிகபட்சம் 21 யூனிட் வீதம் மொத்தமே 63 யூனிட் மது மட்டுமே ஒரு வாரத்திற்கு அருந்த வேண்டும்.
மறந்திராதீங்க 21 யூனிட் மதுவினை அருந்த 2 மணி நேரம் ‛சிப் பை சிப்’ ஆக அருந்த வேண்டும். இது ரம், ஓட்கா, பிராந்தி போன்ற மது வகைகளுக்கு பொறுந்தும். பீர் என்றால் வாரம் 3045 மி.லி., (அதாவது 4 பாட்டில்) அருந்தலாம் என இந்த ஆய்வு நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறைதான் உலகின் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த நடைமுறைப்படி மது அருந்தினால் உடலுக்கும் மனதிற்கும் அவ்வளவு விரைவாக எந்த பிரச்னையும் வந்து விடாது.
ஏன் இப்படி குடிக்க முடியாது: மேலைநாடுகளின் பருவ நிலைக்கு இது சரியாக வரும். ஆனால் நம் நாட்டு மக்களை பொறுத்தவரை இந்த நடைமுறைப்படி மதுஅருந்த முடியாது. உடலில் சென்ற பின்னர் ஆல்கஹால் ஏற்படுத்தும் ‛டாலரென்ஸ்’ இதற்கு முக்கிய காரணம்.
முதன் முறையாக மது அருந்தும் போது, மூளை நரம்புகளை துரிதமாக செயல்பட வைக்கும். உடலின் நரம்பு மண்டலம் வெகுவாக துாண்டப்படும்.
அப்போது நம் செயல்பாடுகளும் துரிதமாக இருக்கும். எனவே முதன் முறை மது அருநதும் போது, அதிகபட்சம் 100 மி.லி., மதுவே நமக்கு மிகவும் போதுமானதாக இருக்கும். அடுத்தடுத்து மது அருந்தும் போது, ஆல்கஹால் டாலரென்ஸ் காரணமாக 100 மி.லி., ஏற்படுத்திய துாண்டுதலை நம் உடலில் உருவாக்க நமக்கு 300 மி.லி., தேவைப்படும்.
இப்படி படிப்படியாக மதுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். குறைவாக மது அருந்தும் போது துாண்டப்படும் நரம்பு மண்டலம், அதிகமாக மது அருந்தும் போது செயல் இழந்து விடும். தினமும் மது அருந்துபவர்களுக்கு தொடக் கத்தில் 100 மிலி ஆக இருந்த மதுவின் அளவு அடுத்த ஒரு மாதத்தில் 1.5 லிட்டர் என்ற அளவுக்கு அபாயகரமாக உயர்ந்து விடும்.
இவ்வளவு மது அருந்தும் போது, உடல் நலம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்படும். உடல் நலத்தை பொறுத்தவரை மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் செயல் இழப்பு, நரம்பு மண்டலம் செயல் இழப்பு ஏற்படும். மனநலம் பாதிக்கும். மனச்சோர்வு ஏற்படும்.
மனப்பதற்றடம் ஏற்படும். மனச்சிதைவு, மனஎழுச்சி நோய், துாக்கமின்மை உட்பட பல்வேறு பிரச்னைகள் விடாமல் துரத்தும். இறுதியில் இந்த பிரச்னை மயானம் வரை கொண்டு போய் சேர்த்து விடும். தவிர மது அடிமைகளை மீட்பது அவ்வளவு சுலபம் இல்லை.
மதுவில் இருந்து மீட்க சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை பெறும் போதோ அல்லது சிகிச்சை முடிந்த பிறகோ ஏதாவது ஒரு சூழலில் சிறிதளவு மது அருந்தினாலும் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும்.
எனவே மனநல மருத்துவர்கள் மதுப்பிரியர்களுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் தயக்கம் காட்டுவார்கள். அதனையும் மீறி சிகிச்சை பெற்றால் அவர்கள் மிகுந்த பாதுகாப்பு, மனோபலத் துடன் செயல்பட்டு அதில் இருந்து மீள வேண்டும். அது அவ்வளவு சுலபம் அல்ல இவ்வாறு அவர் கூறினார்..
இது தொடர்பாக சேகரித்த ஆய்வு முடிவுகள் குறித்து தேனி மனநல மருத்துவர் கூறியதாவது: மது அருந்துபவர்களின் எண்ணிக்கை பல கோடி என்ற அளவில் இருந்தாலும், அதில் சில லட்சம் பேர் மட்டுமே மேலே குறிப்பிட்ட பிரச்னைகளில் சிக்கி உயிர் இழக்கின்றனர்.
பலர் மீண்டு விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? எல்லோரது உடலிலும் ‛சைக்காலிஜிகல் டிபென்ஸ் மெக்கானிஷம்’ என்ற ‛மனநல பாதுகாப்பு முறைகள்’ இயல்பாகவே உண்டு. நமது உடலில் உள்ள இந்த மனநல பாதுகாப்பு இயக்கம் குறிப்பிட்ட அளவுடன் மதுவை நிறுத்தச்சொல்லி போராடும்.
பல நேரங்களில் மது அருந்தக்கூடாது என தடை விதிக்கும். இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் எல்லோரது உடலிலும் உள்ள ‛மனதை மனதே பாதுகாக்கும்’ நடைமுறைகள் தான், எனவே மது அருந்தும் முன்பும், மது அருந்தும் போதும் நம் உள்மனம் சொல்வதை நாம் கேட்டாலே போதும், மீள்வது எளிது.
மதுஅருந்த வேண்டும் என்ற நெருக்கடியான மனச்சூழல் உருவாகும் போது, துாங்குதல், உடற்பயிற்சி செய்தல், அமைதியாக தியானம் செய்தல், பாடல்களை கேட்டல், நீச்சல் பயிற்சி செய்தல், வாக்கிங் செல்லுதல், சினிமா பார்த்தல் போன்ற மனதிற்கு பிடித்த வேலைகளை செய்யும் போது, நாம் அப்போது ஏற்படும் மதுஅருந்தும் எண்ணத்தை மாற்றி விடலாம்.
இப்பயிற்சிகளை தொடரும் போது முற்றிலும் மதுப்பழக்கத் தில் இருந்து விடுபடவும் வாய்ப்புகள் உள்ளன. மதுவில் இருந்து விடுபடுதல் மறுபிறவி எடுப்பதற்கு சமமான ஒரு நிலை ஆகும். எனவே நம் மனம் சொல்வதை மட்டுமே கேளுங்கள்.
தேனி மருத்துவக் கல்லுாரி மனநல மருத்துவர்கள் கூறுகையில், மதுவை விட கொடிய பழக்கம் கஞ்சா புகைத்தல். துாய கஞ்சா மருத்துவத்துறையில் பல்வேறு நிலைகளில் மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால், அதில் புகையிலை கலந்து போதைக்காக பயன்படுத்துவது புற்றுநோயினை உருவாக்கி விடும். தற்போது கள்ள மார்க்கெட் முழுவதும் புகையிலை கலந்த கஞ்சாவே விற்கப்படுகிறது.
துாய கஞ்சா ஒரு மருந்துப்பொருள். பல்வேறு மருந்துகளில் கஞ்சா பயன்பாட்டில் உள்ளது. கஞ்சா குடித்த உடனே மனநல பாதிப்பினை உருவாக்கி விடும். அது மெல்ல, மெல்ல வளர்ந்து தன்னிலை மறக்க செய்து விடும். தன்னையே மறந்த பின்னர், உறவினர்களை எப்படி நினைவில் வைத்திருக்க முடியும்.
தன்னிலை மறத்தல், தன்சுத்தம் மறத்தல் போன்ற பெருந்தீங்குகளை உருவாக்கி, பயன்படுத்துபவர்களை மனநோயாளியாக்கி விடும். கஞ்சா அடிமைகளை மீட்பது எளிது. தவிர அவர்களுக்கு கஞ்சா கிடைக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும், சில நாட்களில் மீண்டு விடுவார்கள்.
அதற்காக கஞ்சா என்பது மருந்தே தவிர போதை வஸ்து அல்ல. கஞ்சா புகைப்பது புகைப்பவர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தையே புதைத்து விடும் என்பதை மறந்து விடக்கூடாது.. எனவே தான் அரசு கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடை செய்துள்ளது என்றனர்.
காவல்துறையினர் கூறும் புள்ளி விவரங்கள்: மது அருந்துபவர்களால் ஏற்படும் சமூக தீங்குகள் குறித்த புள்ளி விவரங்கள் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கி விடுகிறது. இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர்.
இதில் மது அருந்துபவர்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் மட்டும் ஆண்டுக்கு 1.10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, இவர்கள் வாகனம் தாறுமாறாக ஓட்டுவதால் எதிரே நடந்து வரும், அல்லது வாகனத்தில் வரும் அப்பாவிகளும் பலியாகின்றனர்.
இந்த விபத்தில் குடும்பத்தலைவியோ, தலைவனோ உயிரிழந்தால், அந்த குடும்பமே இறந்ததிற்கு சமமான துயரம் உருவாகி விடுகிறது. விபத்தில் தாய், தந்தையை இழக்கும் குழந்தைகள் தான் மிகப்பெரிய சமூக குற்றவாளியாக உருவாகி விடுகிறார்கள்.
அதேபோல் மது அருந்தும் பெற்றோர்களின் குழந்தைகள் பெரும்பாலும் சமூக விரோதியாகவே உருவாகி விடுகின்றனர். இதனால் சமூகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பல்வேறு சமூக விரோத செயல்கள் அதிகளவு நடக்கின்றன.
மது அருந்துபவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. குடும்பம் பாதிக்கப்படுகிறது. பலருக்கு திருமணம் ஆனாலும் குழந்தைகள் பிறக்காமல் போவதற்கு அளவுக்கு மீறிய மதுப்பழக்கமும் ஒரு காரணமாக உள்ளது.
குழந்தை இல்லாததால் குடும்பத்தில் பிரச்னை, குடும்ப உறுப்பினர்கள் மீது ஏற்படும் சந்தேகம். இதுவே தகராறாக மாறி குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விட்டு விடுகிறது. எப்படி ஆய்வு செய்தாலும் மது அருந்துவதால் நன்மை என்பது எதுவுமே இல்லை. ஆனால் தீமைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இப்போது உள்ள சமூக குற்றவாளிகளின் மூல ஆதாரம் என்ன என்பதை பார்த்தால், அவர்களின் அடிப்படை மதுவையே சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் தெரியவரும் விஷயங்கள் மது ‛வீட்டிற்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பெரும் கேடு’ என்பதே ஆகும். மது இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றனர்.