Close
மே 17, 2024 3:59 காலை

இப்படியும் ஒருவரா? “புதுக்கோட்டை பேக்கரி மகராஜ் சீனுசின்னப்பா”

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேக்கரி மகராஜ் நிறுவனர் சீனுசின்னப்பா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நம்முடைய நிர்வாகத்திலுள்ள பள்ளியின் வகுப்பறைகள் கஜா புயலால் சேதமடைந்து விட்டன. அதனைக் காணச் சென்ற போது மக்களின் அவல நிலையைப் பார்க்க நேர்ந்தது. ஏறத்தாழ 20 நாட்களுக்கு மேலாக மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்கள் . அங்குதான், சீனு சின்னப்பா என்ற நம் அன்பரைச் சந்தித்தோம். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க மகாராஜா பேக்கரி என்ன இனிப்பகங்கள் நடத்துபவர். உடல் நலிவுற்ற நிலையிலும் உள்ளம் தளராமல் ஏழைகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். திருத்துறைப்பூண்டி அருகே அவர் பிறந்த பாமணி உட்பட 15 கிராமங்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவில் பொருள்களை நிவாரணமாக வழங்கியிருக்கிறார். கிராமத்தில் விவசாயத்தோடு தொடங்கிய வாழ்வு, இன்று இனிப்பகத்தின் உதவியால் இனிப்பாக மாறியிருக்கிறது. அவர் ஏழைகளுக்கு இனிப்பாக இருக்கிறார். அவருக்கும் ஒரு துயரச் செய்தி வந்தது. அவர் சகோதரியின் மகனும், இயற்கை விவசாய ஆர்வலருமான நெல் ஜெயராமன் மறைந்துவிட்ட செய்தி. ஆனால் அடுத்த நாளே மக்களுக்கு நிவாரணப் பணி தொடர ஓடி வந்து விட்டார். அவரைப்பார்த்து “இப்படியும் ஒரு மனிதரா?” என்று நாம் வியந்து நெகிழ்ந்து போனோம்.
–தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்தவிகடன் “அன்பே தவம்” நூலில்(பக் 4).

விடைபெறுகிறேன்…

காலங்கள் கடந்து விட்டன
உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டன.
ஆசைகள் எதுவும் இல்லை.
ஆசைகளும் தேவைகளும் விருப்பமில்லை.
என்னோடு எனக்காக உழைத்த
எனது உடலும் உயிரும்
என்னை விட்டு பிரிய மனமில்லை போலும்
நான் வாழ்ந்தது போதும் என்றாலும்
இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து பாரேன்
என்று பிடிவாதம் பிடிக்கிறது.
நான் கஷ்டப்படுவது விதியின் செயலே
என் வாழ்க்கையில் எல்லாவித
செல்வங்களையும் பெற்றவன்
நிறைவாக வாழ்ந்து விட்டேன்
முன்னோர்கள் ஆசியோடு
இறைவன் அருளோடு
இந்த பிறவியில்
வாழ்ந்து நிம்மதியோடு
முழு மனதோடு எனது அன்புக்கு
ஆளானவர்களிடம் இருந்து
விடைபெறுகிறேன்.

-சின்னப்பா இவ்வுலகை விட்டு விடை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதியது(பக். 40).

புதுக்கோட்டை” பேக்கரி மகராஜ் ” நிறுவனர் சீனு. சின்னப்பா,
மே 1, 2022 -ல் மறைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வாசகர் பேரவை சார்பில் தொகுக்கப்பட்டதுதான் “அறமனச் செம்மல் “. தொகுப்பு.

நமக்கு அழகாக கவிதையோ கட்டுரையோ எழுத வராது என்பதால், சின்னப்பாவை நன்கு அறிந்த, நீண்ட நாட்கள் அவரோடு பயணித்த அவருடைய உடன்பிறப்புகள், நண்பர்கள், அவருடைய நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்கள், கவிஞர்கள், அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் என்று பலரிடமும் கருத்துகள் பெற்று, முதல் தொகுப்பு, சின்னப்பாவின் 16 -ஆம் நாள் சடங்கின் போது வழங்கப்பட்டது.

இரண்டாவது தொகுப்பு, முதல் தொகுப்பில் விடுபட்டுப்போன, சின்னப்பா மிகவும் மதிக்கும் அரசியல்வாதி, அவருடைய முதல் கடையை திறந்து வைத்த, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உட்பட, பலரிடமிருந்தும் கருத்துகள் பெற்று தொகுத்து, சின்னப்பாவின் முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது வழங்கப்பட்டது.

சின்னப்பாவுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டவர்கள் எல்லோரும் குறிப்பிடும் ஒரே அம்சம் அவருடைய “ஈகை குணத்தை “ப் பற்றியே. 35 ஆண்டுகள் அவருடைய நிறுவனத்தில் பணியாற்றிய மணி மாஸ்டர் சொல்கிறார், ” தொழிலாளர் வீட்டு விஷேசங்களுக்கு தொழில் தொடங்கிய போது 100 ரூபாய் கொடுத்தார். அப்புறம் 1,000, 10,000. இப்போது 100,000. அவரின் வாழ்க்கை உயர உயர அவரின் ஈகை மனப்பான்மையும் உயர்ந்தது “. இவர் ஒரு நல்ல கவிதையும் எழுதியிருக்கிறார்.

அதே போல அவருடைய சிறு வயது முதல் அவருடைய நண்பரான பாலு , தன்னுடைய நினைவுகளை கண்ணீர் மல்க என்னோடு பகிர்ந்து கொண்டார்.

சின்னப்பாவிற்கு அறமனச் செம்மல் விருது வழங்கி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கிய வாழ்த்து மடலும் இத்தொகுப்பில் உள்ளது.சின்னப்பாவுடன் தங்களுக்கிருந்த உறவை ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாக பதிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சின்னப்பா மறைவு செய்தி கேட்டவுடன், கவிச்சுடர் கவிதைப்பித்தன் எழுதிய கண்ணீர்க் கவிதையும் இத்தொகுப்பில் உள்ளது.

சின்னப்பா கவிதையும் எழுதுவார் என்பது அவர் டைரியைப் பார்த்த போதுதான் தெரிந்தது. மேலே உள்ளது, இவ்வுலகிலிருந்து விடைபெறத் தயாராக இருந்த அவர் எழுதிய கவிதை, இதைத் தவிர வேறு சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top