Close
மே 17, 2024 3:41 காலை

புத்தகம் வாசித்தால் அறிவு நிரந்தரம்: ச. சுதந்திரராஜன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பொம்மாடிமலை பொன்மாரி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழா

புதுக்கோட்டை பொம்மாடி மலை, பொன் மாரி கல்வியியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தினத்தை கொண்டாடினார்கள்.

விழாவிற்கு பொன்மாரி கல்வி நிறுவனங்களின் செயலர் சத்திய ராம் ராமுக்கண்ணு தலைமை வகித்தார்.

விழாவில், சிறந்த வாசகரும், தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மேனாள் தலைவருமான ச. சுதந்திரராஜன் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:

“உலகில் உள்ள ஜீவராசிகள் இயங்குவது உடற்பசியால். அதில் மனிதனுக்கு மட்டுமே அறிவுப் .பசியுள்ளது. அந்த அறிவுப்பசியை புத்தக வாசிப்பு மட்டுமே போக்க முடியும். புத்தகம் மூலம் மட்டுமே இன்றைய அறிவை எதிர்கால சந்ததிக்கு கடத்த முடியும். ஆகவே உலகில் நடைபெறும் நிகழ்வுகள் யாவற்றையும் புத்தகமாக பதிவு செய்வது அவசியம்.

உண்மையான கல்வியின் அடிப்படை கேள்வி கேட்பது. அந்த கேள்வி கேட்பதற்கான உந்துதலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பாடப் புத்தகம் மட்டுமே பயன்படாது. அதையும் தாண்டிய பரந்த வாசிப்பு அவசியம். அதற்கான உந்துதலை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். பாட புத்தகம் மட்டுமே நல்ல ஆசிரியரையோ, அறிவாளிகளையோ தலைவர்களையோ உருவாக்கி விடாது.அதையும் தாண்டிய பரந்த வாசிப்பு தான் உருவாக்கும்.

நேரு வாசிப்பிற்கான நேரத்தை உறக்கத்திற்கான நேரத்திலிருந்து களவாடியதாகக் கூறுகிறார். எத்தனைப் பணிகள் இருந்தாலும் வாசிக்கும் பழக்கத்தை, நேசித்தவர் கலைஞர் கருணாநிதி. இவர்களிடமிருந்து வாசிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

வாசிக்கும் பழக்கத்தை செய்தித் தாளிலிருந்து தொடங்க வேண்டும். நாள் தவறாமல் கலைஞர் கருணாநிதி செய்தித்தாள் வாசிப்பார். செய்தித்தாள் வாசிப் பின் மூலம் உலக அறிவைப் பெற முடியும். பின்னர் கதை, வரலாறு என்று வாசிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். வரலாற்றை அறியாத வர்கள் அடிமைப்பட்டுப் போவார்கள். வரலாறு நமக்கு நமது பண்பாடு நாகரீகத்தைச் சொல்லித்தருகிறது. ஆகவே வரலாற்று அறிவு அவசியம்.

புத்தக வாசிப்பு அறிவை மட்டுமல்ல சமூகத்தில் நமக்கு மரியாதை யையும் பெற்றுத் தருகிறது. புத்தகம் வாசித்தால் அறிவு நிரந்தரம். சாகும்வரை தொடரும். செல்போன் நம் வாழ்க்கையை கவிழ்த்து விடும். எனவே வாழ்க்கை வளம் பெற புத்தகம் வாசியுங்கள். இன்றைய அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்த புத்தகம் வாசியுங்கள். உங்களைப் போன்றவர்கள் நல்ல ஆசிரியராக திகழ புத்தகம் வாசியுங்கள்” என்றார்.

பின்னர் வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், உலக புத்தகத்தினம் தொடர்பான வரலாற்றைக் கூறி, நாளில் தவறாமல் 50 பக்கமாவது படிக்கும் பழக்கத்தை தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் வாசகர் பேரவை சார்பில் நூல்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக கல்லூரி முதல்வர் செ. இராஜலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக உதவிப் பேராசிரியர் ப.சந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்வை உதவிப் பேராசிரியர் கா.மாரிமுத்து தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top