சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் ‘தமிழ் மொழி வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடைபெற்றது.
அமெரிக்காவிலுள்ள தமிழ் அநிதம், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் உள்ளிட்ட பதினான்கு அமைப்புகள் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய இம்மாநாட்டிற்குக் கல்லூரியின் முதல்வர் இரா. சுதாபெரியதாய் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலாளர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் அமெரிக்காவிலிருக்கும் தமிழ் அநிதம் அமைப்பு மற்றும் எஸ்.எப்.ஆர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து கணினித் தமிழ் தொடர்பான கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
மாநாட்டில் கட்டுரை வாசித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பா. பொன்னி வரவேற்புரை வழங்கினார். முடிவில் தமிழ் அநிதம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சுகந்தி நாடார் நன்றி தெரிவித்தார்.