Close
செப்டம்பர் 20, 2024 6:43 காலை

புயல், மழையால் பாதிக்கப்பட்ட வடக்கு, தெற்கு மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ஜன 8 ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி

தமிழ்நாட்டில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட வடக்கு, தெற்கு மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி வலியுறுத்தி  ஜனவரி 8 -ல்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் 9  இடங்களில் மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி  வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் அடித்த மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் தலைநகர் சென்னையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய ஒன்றிய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டியது.

இந்த நிலையில் டிசம்பர் 18 -ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்ப்பட்டது.

சென்னை உள்ளிட்ட நாலு மாவட்டங்கள் கடுமையாக புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதி முழுமையாக வழங்காமல் சிறிய பகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது

தெற்கு மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை உள்ளடக்கி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் இதுவரை காணாத வகையில் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய ஆய்வு குழுவும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டும் உரிய நிவாரணத்தை வழங்கவில்லை. ஜனவரி 3 -ஆம் தேதி பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவிற்கு திருச்சிக்கு வருகை தந்த ஒன்றிய பிரதமர் மோடி புயல் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்யும், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரணம் ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இதுவரை ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பாதிப்புகளை ஆய்வு செய்தும்,நேரடியாக பார்வையிட்டும் தேசிய பேரிடராக அறிவிக்காததையும், தமிழ்நாடு முதல்வர் கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதி முழுமையாக வழங்காததை கண்டித்தும், வலியுறுத்தியும், நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30,000 ம் வழங்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட  9 இடங்களில் நடைபெறுகிறது என்று மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top