Close
நவம்பர் 22, 2024 11:17 காலை

பொங்கல் பண்டிகை… விற்பனைக்கு வந்துள்ள பலவித மண்பானைகள்…

புதுக்கோட்டை

கொசலாக்குடி மண்பாண்ட வியாபாரி வேலம்மாள்

புதுக்கோட்டை அருகே உள்ள கொசலாக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலவிதமான மண்பானை உள்ளிட்ட  பொருட்கள் விற்பனை வந்துள்ளன.

புதுக்கோட்டை அரிமளம் செல்லும் சாலையில் உள்ள கொசலாக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் சாலையோரத்தில் பொங்கல் பானை சட்டி மட்டுமின்றி விதவிதமான அகல்விளக்கு, மண் அடுப்பு, குடிநீர் ஜாடிகள், திருஷ்டி பொம்மைகள் மற்றும் சிறிய சுவாமி சிலைகள் விற்பனை செய்கின்றனர்.

இவர்கள் விற்பனைக்காக மண்பாண்டங்களை சாலை யோரத்தில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர்.  இந்நிலையில் இப்பகுதி மண்பாண்டக்கலை தொழிலாளர்கள் பாரம்பரியமாக இத்தொழில் நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளது.

கிராமங்களில் மட்டுமே மண்பாத்திரங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளன. ஆங்காங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் கூட இந்த மண் பாண்டங்களை விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.

பொங்கல் பண்டிகை என்றால் இந்த மண்பாண்டங்கள் மீது அனைத்து தரப்பினரின் கவனம் பெறும். அதேபோல் சோறு, கறி குழம்பு எதுவானாலும் மண்பாண்டங்களில் சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்.இரண்டு நாட்கள் ஆனாலும் சுவை கூடுமே தவிர கெட்டுப்போக வாய்ப்பில்லை.

மண்பாண்ட தொழிலில் பல்வேறு சிரமங்கள் இருந்தும் தளராத மனதுடன் பொங்கலை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி சென்றாண்டுகளை போலவே விதவிதமான மண்பாண்டங் களை தயார் செய்து, விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை
கொசலாக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண்பானைகள்

இந்தநிலையில் பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் வியாபாரம் மந்தமாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.  காரணம் மழை பெய்து கண்மாய்களில் நீர்தேங்கியுள்ளதால் பானை செய்வதற்காக மூலப் பொருள் மண் கிடைக்கவில்லை. இதனால், மண்பாண்டங்களை போதிய அளவில் தயாரிக்க முடியவில்லை.

இதுகுறித்து மண்பாண்ட விற்பனையாளர் வேலம்மாள் கூறுகையில்:  உள்ளூரில் தயாரிப்பு இல்லாததால் பொங்கலை எதிர்பார்த்து  வெளியூர்களில் இருந்து வாங்கி வந்த  மண்பாண்டங்களை விதவிதமாக அடுக்கி வைத்துள்ளோம். பொங்கல் பானை ரூ.100 முதல் 250 ரூபாய் வரை உள்ளது. சட்டி 100 முதல் ரூபாய் 150 வரை உள்ளது. அடுப்பு ரூ.200 முதல் ரூபாய் 300 வரை விற்பனைக்கு வைத்துள்ளோம். சென்ற ஆண்டு விற்பனை செய்த விலையை விட பெரிய அளவில் விலை உயரவில்லை.  பொங்கலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளது. ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top