Close
நவம்பர் 23, 2024 9:12 மணி

புத்தகம் அறிவோம்.. “சாதி மாறி சாமி ஆனவன்”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

பொங்கல் என்றவுடன் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது திருமணமான பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய ‘பொங்கல்படி.’ சீர் என்றும் சொல்லலாம். பொங்கல் இடுவதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், தேங்காய், காய்கனிகள் கிழங்கு வகைகள் கரும்பு அனைத்தையும் தாராளமாக வாங்கி அவற்றை தலைச்சுமையாகவோ, மாட்டுவண்டியிலோ கொண்டு சென்று, அதற்குமேல் ‘சுருள்’ என்கிற வகையில் அவரவர் தகுதிக்கேற்ப பணம் வைத்துக் கொடுக்க வேண்டும்.

பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத் துவங்கும் ‘பொங்கல் படி’ கொடுக்கும் நிகழ்வு பொங்கலுக்கு முதல்நாள்வரை நீடிக்கும். தலைப்பொங்கல் என்றால் பொங்கல் இடுவதற்கு தேவையான பித்தளை பாத்திரங்கள் , பித்தளை விளக்கு ஆகியவையும் பொங்கல் படி பட்டியலில் இணைந்து கொள்ளும்.(பக்.78)

தைப்பொங்கல் தமிழர் திருநாள் என்று சொன்னாலும், தமிழராய்ப் பிறந்து, தமிழராய் வளர்ந்து, தமிழராய் வாழும் கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை.

காரணம் பொங்கலுக்கு மதச்சாயம் பூசிவிட்டார்கள். ஓணம் கொண்டாடாத மளையாளிகள் இல்லை. யுகாதி கொண்டா டாத தெலுங்கர்கள் இல்லை. பொங்கல் கொண்டாடாத தமிழர்கள் உண்டு என்பது மன வேதனை யோடு சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சாதியால், மதத்தால் ஒன்று கூடும் தமிழர்கள், மொழியால் ஒருங்கிணைய மறுப்பது தமிழனின் மிகப்பெரிய பலவீனம் .

‘தைப்பொங்கல் : காணாமல் போகும் கிராமத்துக் கலாசாரங் கள்’கட்டுரையில்.(பக்.85.)

கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு 2008ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று தை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கும் அரசாணையை வெளியிட்டது. ஆனால் அதற்கு பின்பு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து 2011, ஆகஸ்ட் 23ல் அரசாணை வெளியிட்டது.

முன்னது (தமிழ்) இன உணர்வு அடிப்படையிலானது. பின்னது (இந்து) மத உணர்வு அடிப்படையிலானது. இந்த இரண்டு உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டு வானவியல் அடிப்படை யிலும், நிலவியல் அடிப்படையிலும் தமிழ் மக்கள் வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு, நம் அறிவு சார்ந்தும், சிந்தித்தால், பழந்தமிழகத்தில் சித்திரையை விடவும், தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதற்கான கூடுதல் காரணங்கள் உள்ளன.

‘தைப்பொங்கலும் தமிழ்ப்புத்தாண்டும்’ கட்டுரையில்(பக்.109). எஸ்.ஆர்.எஸ்’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன், இயற்பியல் பேராசிரியர்.அரசுக் கல்லூரி பணி ஓய்வுக்குப் பின், அறிவியலோடு, தமிழறிஞராகவும், நாட்டுப்புறவியல் ஆய்வாள ராகவும் மாறியுள்ளார். சுஜாதா, நெல்லை சு.முத்து போன்று அறிவியலை , அழகிய, எளிய தமிழில் தருவதில் வல்லவர்.

பல்வேறு இலக்கிய மாத இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் இவரது கட்டுரைகள் காக்கைச் சிறகினிலே இதழில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. அதன் தொகுப்புதான் இந்த “சாதி மாறி சாமி ஆனவன்” நூல்.இந்த நூலில் தமிழர் வாழ்வு,பண்பாடு, அறிவியல் தொடர்புடைய 23 கட்டுரைகள் இந்நூலில் உள்ளது.

அருந்ததியர் பெண்களை திருமணம் செய்துகொண்டு அருந்ததியர்ரான ஒரு அந்தனன் கடவுளாக மாறிய, ஆரிய முத்துப் பட்டன் கதையை சொல்லும் கட்டுரைதான் நூலின் தலைப்பு. தைப்பொங்கலைப் பற்றி இரண்டு அருமையான கட்டுரைகள் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் திறமை யான ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து, ஏறத்தாழ 600க்கு மேற்பட்டவர்களை மேற்படிப்பு படிக்க வைத்த ராமநாதன் ஐஏஎஸ் அவர்களைப் பற்றிய கட்டுரை ஒவ்வொரு உயர் அரசு அதிகாரிகளும் வாசிக்க வேண்டிய ஒன்று.பஞ்சகவ்யம், கோமூத்திரம் : மக்களை ஏமாற்றும் மாற்று மருத்துவம் என்ற கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆசிரியரின், ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய பிற நூல்கள்.
1 சூரியப்புள்ளிகளும் இளம் வயது மரணங்களும்.
2. அன்றாட வாழ்வில் அறிவியல்.
3. குட்டிப் பையனும் குண்டு மனிதனும்.

வெளியீடு-காக்கைப் பதிப்பகம், சென்னை.9715146652.ரூ.200.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top