Close
மே 20, 2024 6:28 மணி

புத்தகம் அறிவோம்… சோ எழுதிய எங்கே பிராமணன்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எங்கே பிராமணன்

இன்னும் சொல்லப்போனால், நமது புராணங்களில் சொல்லப்பட்ட வகைகளில் எந்த வகைகளிலுமே சேராத புது மனிதர்கள்தான் இன்று இருக்கின்ற நாம் அனைவருமே . நம்மில் யாரும் ஷத்திரியர்களும் அல்ல, பிராமணர்களும் அல்ல, வைசியர்களும் அல்ல, சூத்திரர்களும் அல்ல. ஒவ்வொரு வகையிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்த கலவையாக, ஒரு புதிய வாழும் வகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் தான் நாம் அனைவரும்!

வைசிய வகையை ஓரளவு அதிகமாக கலந்து கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால் எல்லோருமே ஓரளவு வர்த்தகம் செய்கிறோம் – சிலர் பொருட்களை விற்கிறோம், சிலர் திறமைகளை விற்கிறோம். சிலர் உழைப்பை விற்கிறோம். இதில் பிராமணன் என்று சொல்லிக் கொள்ள எவனுக்கு உரிமை இருக்கிறது? அது உயர்ந்த உன்னதமான வகை.

பிறருக்காக வாழ்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்காகக் கடவுளை வணங்கி, தான் எந்தவித சுகத்தையும் தேடிச் செல்லாமல், கிடைத்த உணவைப் புசித்து, சத்தியம் தவறாமல் வாழ்ந்து, வேதங்களைக் கறைத்துக் குடித்து, எறும்பிலிருந்து ஈஸ்வரன் வரை சகலரையும் சமப் பார்வையில் வைக்கக் கூடியவனே பிராமணன்.

அப்படிப்பட்ட உன்னதமான மனிதன் எங்கே இருக்கிறான்? இன்றைய உலகில் அப்படி ஒருவன் இருக்கத்தான் முடியுமா? (பக் 428-429).

“எங்கே பிராமணன்?” ஒரு பிராமணரான’சோ’ எஸ்.ராமசாமி, தன்னுடைய ‘துக்ளக்’ பத்திரிக்கையில் தொடர்கதையாக எழுதியதின் நூல்வடிவம்.

பிராமணம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. அந்த வாழ்க்கை நெறியை கடைபிடிக்கக் கூடிய எந்த பிராமணரும் இன்று உலகில் கிடையாது. தங்களை யார் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் அறியாமையில் உழல்பவர்கள் என்பதே சோ இந்த நாவல் வழி சொல்லும் செய்தி.

அசோக் என்ற பிராமண இளைஞன், ஹிக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர் இருவருக்குமான உரையாடல்கள், விவாதங்கள் வழி இந்து சமயத்தின் சாரத்தை வாசகர்களுக்கு திரட்டித் தந்திருக்கிறார் சோ.

இந்து மதத்தில் உள்ள திருமணம் போன்ற பல்வேறு சடங்குகள், அப்போது சொல்லப்படுகின்ற மந்திரங்கள் அதன் உண்மையான அர்த்தங்கள், ராமனுஜர், நம்பியாண்டார் நம்பி போன்ற சமயப் பெரியார்களின் உபதேசங்கள், பிராமணன் என்பவன் யார்? உண்மையான பிராமணனின் குணாதிசயங்கள் என்ன? அப்படிப்பட்டவன் இப்போது இருக்கிறானா? அப்படி ஒருவன் இன்றை சூழலில் இருக்க முடியுமா? என்பதைப் பற்றிய விளக்கங்கள் எல்லாம் இந்நாவலில் உள்ளது.
இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்களை, 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இக்கதையில் வரும் அசோக் விவாதம் செய்திருக்கிறான்.எங்கே பிராமணன்? நாவல் வழி இந்து சமயப் பெருமை பேசும் நூல்.வெளியீடு-அல்லயன்ஸ்  கம்பெனி,244, ராமகிருஷ்ண மடம் சாலை, சென்னை. 600004.(1992).  விலை-ரூ.100.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top