Close
அக்டோபர் 5, 2024 10:27 மணி

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 32 பேர் காயம்

புதுக்கோட்டை

வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் இளைஞர்

புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 32 பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலை கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது.

அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அங்கு உள்ள பிடாரி அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.20 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் 737 காளைகளும் 141 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வீரர்கள் சுழற்சி முறையில் 4 சுற்றுகளாக வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளைகள் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொரோனா பரிசோதனை கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியவர்கள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறி பாய்ந்து சென்றது. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு தழுவவும் தழுவ முயற்சியும் செய்தனர். மேலும் இதில் சிறந்த முறையில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அதிமுக அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இதேபோல் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமானும் கலந்து கொண்டு சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அவரது பெயரிலும் இந்த போட்டியில் காளைகள் அவிழ்க்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் ‌32 பேர் காயம டைந்த நிலையில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண் காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top