தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி அரசியல் சூழ்நிலைகள் பற்றியும், தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் தமிழ்நாட்டு விரோத நடவடிக்கைகள் பற்றியும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிகளை தோற்கடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
ஒன்றிய செயலாளர் பி.குணசேகரன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் பேராசிரியர் பாஸ்கர்,ராமலிங்கம், சொக்கலிங்கம், மாரிமுத்து ,சீதாராமன், மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் சாலை பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரிலிருந்து, கும்பகோணம் வரை குண்டு குழியுமான சாலைகளிலேயே பயணம் செய்ய நேரிடுகிறது.
ஆங்காங்கே செப்பனிப்பட்ட சாலைகளும் பெயர்ந்து போய் மோசமாக உள்ளது. உடனடியாக நெடுஞ்சாலை துறை போர்க்கால அடிப்படையில் தரமான சாலையை அமைத்து தர வேண்டும்.
தஞ்சாவூர் கொடிக்காலூர் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட புதிய குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை, உடனடியாக குடிநீர் தொட்டியை திறக்க வேண்டும்.
இப்பகுதியில் நவீன கழிவறை மற்றும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், தஞ்சாவூர் விளார் பாரதி நகர் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதேபோல தஞ்சாவூர் கீரைக்காரதெருவில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் ஆங்காங்கே குழிகளை தோண்டி, பணிமுடித்து சரிவர மூடாமல் அப்படியே போடப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன