மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்குரிய நிலுவைத் தொகையை உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும் என்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வந்து சேர வேண்டிய வரி பங்கீடு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று தருவதற்கு திமுக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சென்னையில் புதன்கிழமை தெரிவித்தார்.
வடசென்னை வடக்கு (கி) மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் தலைமையில் சென்னை தண்டையார்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு 10,107 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து உள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்று வந்த பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சில திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு சேர வேண்டிய ரூ.2.16 லட்சம் கோடி வரி பங்கீடு நிலுவை தொகையை பெறுவதற்கு திமுக அரசு முழு திறனுடன் செயல்படவில்லை.
இத்தொகையை உரிய வழியில் வலியுறுத்தி பெறுவதற்கு திமுக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த நிலுவை தொகை தமிழக அரசுக்கு கிடைக்கும் எனில் பல்வேறு திட்ட பணிகளுக்கு உரிய வழியில் செலவிட முடியும். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ. 2.20 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட அதிமுக அரசு இவ்வாறு கடன் வாங்கிட வில்லை.
2014 ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை ரூ. 55 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.95 க்கு மேல் சென்று விட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் விலையை குறைப்ப தற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகரத்தை வெள்ளப் பெருக்கில் இருந்து காப்பாற்றும் வகையில் பெருக்கும் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க அதிமுக அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்து இதில் 1,848 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிமுக ஆட்சி காலத்திலேயே பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டப்படணிகளில் முறையாக முடிக்காத காரணத்தால் கடந்த மிக்ஜாம் புயலில் சென்னை மாநகரம் தத்தளித்தது. ஆனால் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன என்று கூறி சென்னை யைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வந்ததை மக்கள் அறிவார்கள்.
சொத்து வரி, வீட்டு வரி, வணிக நிறுவனங்களுக்கான வரி உள்ளிட்டவைகள் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட் டுள்ளன.் இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்புகளை திமுக அரசு புறம் தள்ளுகிறது. அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறையில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை 2019 -20 -ஆம் ஆண்டுக ளிலேயே பெற்றுவிட்டது.
உயர்கல்வியில் 54 சதவீதம் மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். கல்வி நீர் மேலாண்மை சமூக நலத்திட்டங் கள் உள்ளிட்டவைகளில் அதிமுக அரசு தொடர்ந்து சாதனை படைத்து வந்தது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தை நான்கு பொம்மை முதலமைச்சர்கள் ஆட்சி செலுத்தி வருகின்றனர். திமுக மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை வளையத்தில் இருந்து வருகின்றனர். அடுத்த ஆறு மாதங்களுக்குள் மூத்த அமைச்சர்கள் பெரும்பாலானோர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அண்மையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். முதலீட்டை பெறுவதற்காக அவர் செல்கிறாரா அல்லது அவரே முதலீடு செய்ய செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் ஸ்பெயின் நாடு ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது . இதனால் இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளது இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் பழனிசாமி.