Close
மே 18, 2024 6:33 காலை

மெரினா அருகே ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கடலோர காவல் படை கப்பல்கள்

சென்னை

இந்திய கடலோர காவல் படை 48-வது உதய தினம்

சென்னை மெரினா கடற்கரை அருகே புதன்கிழமை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்து சென்று ஒளிக் கற்றைகளை பாய்ச்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின.  மேலும் மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க ஒத்திகையும் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய கடலோர காவல் படையில் 48-வது உதய தின விழாவினையொட்டி கடந்த ஒரு வாரமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு  சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் சென்னை ராயபுரத்தில் நடைபெற்றன.  இதனைத் தொடர்ந்து புதன் கிழமை சென்னை மெரினா கடற்கரை அருகே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கடலோர காவல் படை ஏற்பாடு செய்திருந்தது.
முதலில் கடலோர காவல் படை வீரர்கள் நடுக்கடலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்பது குறித்த  செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி காண்பித்தனர். இதனை தொடர்ந்து இலகுரக இரண்டு ஹெலிகாப்டர்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று பரவசமூட்டினர். பின்னர் கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்களான ராணி கைடின் லி, ராணி அபாக்கா, சௌனக், சௌரியா மற்றும் இரண்டு அதிநவீன இடை மறிக்கும் படகுகள் உள்ளிட்டவைகள் ஒளிவிளத்தில் மிதந்து வரிசையாக அணிவகுத்துச் சென்றன.  மேலும் கப்பல்களில் இருந்து ஒளிக்கற்றைகள் மாறி மாறி பாய்ச்சப்பட்டு சமிஞ்சைகள் வெளிப்படுத்தப்பட்டன.  இக்காட்சிகள் அனைத்தையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் இருந்து பார்த்து ரசித்தனர். இக்கப்பல்கள் புதன்கிழமை இரவு முழுவதும் பெசன்ட் நகர் கடற்கரை முதல் மெரினா வரை தொடர்ந்து பயணிக்கும் என கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top