சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்
மணலி புதுநகர் வைகுண்ட புரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ராஜ கோபுர ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில்பால் பணிவிடை, உகபடிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான பால் அன்ன பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் பால் அன்னம் எனும் சிறப்பு பொங்கலிடும் நிகழ்ச்சியை தொழிலதிபர் விஜய் அருண் தொடங்கி வைத்தார்.
அப்போது பெண்கள் செங்கல் அடுப்பில் பனை ஓலையில் தீ மூட்டி பாத்திரத்தில் பச்சரிசி, பச்சை பயிறு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பால் அன்னம் எனும் சிறப்பு பொங்கலிட்டனர். இதில் உப்பு மற்றும் இனிப்பு ஏதும் சேர்ப்பதில்லை. பால் அன்னம் பொங்கிய போது பெண்கள் குலவையிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.
இதனையடுத்து மாலை பால் பணிவிடை, உகப்படிப்பு நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெற்றன . இரவு அய்யா வைகுண்டர் இந்திர விமானத்தில் பதிவலம் வந்தார். நிகழ்ச்சியில் தர்மபதி நிர்வாகிகள் துரைப்பழம், ஐவெனஸ், ஜெயக்கொடி வைகுண்டராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.