Close
செப்டம்பர் 20, 2024 6:38 காலை

புத்தகம் அறிவோம்… தம்பலா.. மூன்று மொழிகளில் வெளிவந்த முதல் சிறுகதை

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தம்பலா

கனகலிங்கம் .. தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா…? தேர்தல் காலங்களில் ஜனங் களை அடிக்கிறதும் இம்சிக்கிறதுமாய் இருக்கிறான் என்று கேள்விப்பட்டுத் தான் இது நாள் வரைக்கும் அவனிடம் சிநேகம் செய்ய மனமில்லாது இருந்தேன்.

ஆனால் அது எத்தகைய மூடத்தனம் என்கிறதை நேற்றைக் கும் இன்றைக்கும் நன்கு உணந்து கொண்டேன். அதேவிதமாக தம்பலா வினிடத்தும் அவன் சமூகத்தின் பேரிலும் நடத்தப் படுகின்ற நியாய அநியாயங்கள் குறித்தும் நாம் பிறருக்கு உணர்த்தியாக வேண்டும். தம்பலா, பார்க்கிறத் துக்குத்தான் முரட்டுப்பலா. உள்ளே இருக்கின்ற மதுரமான சுளையைப் போன்று அவனுக்கு நேர்மையான இதயம்…

“ஒரு மனுஷன் தாழ்ந்த குலத்திலே பிறந்து விட்டான் என்ப தற்காக அவனை ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ அவனுக்கும் கேடு, பிறருக்கும் கேடு. இனிமேல் பள்ளனோ … பறையனோ …சக்கிலியோ… தோட்டியோ… யாரும் நம்மை கை நீட்டி அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது … தம்பாலா சிறுகதையில் வரும் கடைசி வரிகள்(பக். 56, 57).

கனலிங்கம் ! தம்பலா நம்மிடம் எவ்வாறு நல்லவனாக நடந்து கொண்டான், பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும் ஹிம்ஸிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப் பட்டுத்தான் நான் இவனிடம் சினேகம் செய்ய மனமில்லாமல் இருந்தேன் ! ” என்று சொன்னார்.

எந்தக்காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கி வைப்பது தவறு என்று பாரதியார் கருதினார். கெட்ட பழக்கவழக்கங்கள் உள்ளவரானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகுவார் களானால், அவர்களைத் திருத்த முடியும், ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ அவர்களுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை. – பாரதியாரால் பிராமண ராக்கப்பட்ட கணேசலிங்கம் எழுதிய” என் குருநாதர் பாரதியார் ” என்ற நூலில்(பக் 70).

தம்பலா என்ற தோட்டி சமூகத்தைச் சேர்ந்தவரை பாரதியார் புதுச்சேரியில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்ததை, பாரதியால்,  பூணூல் போட்டு பிராமணராக்கப்பட்ட ரா.கணேசலிங்கம், தன்னுடைய “என் குருநாதர் பாரதியார் ” புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதை தான், புதுச்சேரியைச் சேர்ந்த பாரதி வசந்தனின் ” தம்பலா”.இதை மூன்று மொழிகளில், ஒரே புத்தகத்தில்- தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு – வெளிவந்துள்ள முதல் தமிழ் சிறுகதை என்று பாரதிவசந்தன் குறிப்பிடுகிறார்.

பாரதி வாழ்ந்த கால புதுச்சேரி சூழ்நிலைகளையும் தோட்டி மக்களின் ‘பீ’ (இந்த வார்த்தை சிறுகதையில் உள்ளது ) அள்ளும் அவலநிலைகளையும் இந்தச் சிறுகதையில் பதிவு செய்திருக்கிறார். தங்களைக் கேவலப்படுத்திப் பேசியதற்காக பீ -யை அள்ளிக் கொண்டு போய் தெருவில் கொட்டி பழி வாங்கியதை, பாரதி – தம்பலா (கற்பனை) உரையாடலில் எழுதுகிறார் பாரதி வசந்தன்.

தம்பாலா கதையில் வரும் தம்பாலா புதுச்சேரியில் வாழ்ந்த மனிதர், பாரதியார் மற்றும் அரவிந்தர் இங்கு வாழ்ந்த காலத்தில், (1908 – 1920) அவர்களின் சமகாலத்தில், அரசியல், சமூக நிகழ்வுகளில் தொடர்புடையவர். சிலகாலம் பிரெஞ்சியரை ஆதரித்தும் இவர் செயல்பட்டிருக்கிறார் என்கிறார் நூலின் அணிந்துரையில் எழுத்தாளர் பிரபஞ்சன்.

மேலும் சொல்கிறார் “ஒரு முக்கிய குறிப்பு என் நினைவில் உள்ளது மூன்றுகல் சுற்றளவுள்ள புதுச்சேரி நகரிலும் முத்தியாலுப்பேட்டையைக் கடந்து போகும் நிலத் தொடர் களிலும் பாரதி நடக்காத பகுதி எதிவும் இல்லை என்கிற செய்தி முக்கியமானது.

குறிப்பாக, சாதி இந்துக்கள் ஒதுக்கி வைத்த தாழ்த்தப்பட்ட வர்கள் என்று மூடர்களால் தாழ்த்தப்பட்ட, உழைக்கும் மக்கள் நிறைந்த சேரிப்பகுதிகள் பலவற்றிற்கும் அவர் பயணம் செய்திருக்கிறார். பேச வேண்டும் என்று பாரதிக்கு தோன்று மேயானால், யாரோடும், எப்பிரிவினரிடமும் அவர் பேசுவது அவரது இயல்புகளில் ஒன்று. “

அப்படிப்பட்ட சந்திப்புகளில் ஒன்றுதான், சேரியில் வாழ்ந்த தம்பாலா வீட்டில் நிகழ்ந்த சந்திப்பு. சிறுகதையின் கருவும் அதுதான்.
அதே போல எல்லோரிடமும் உயர்ந்த குணங்கள் என்ற பாரதியின் நம்பிக்கை இந்தக் கதையின் வழிதெரிகிறது. 176 பக்கத்தில் 60 பக்கங்கள் சிறுகதை வடிவங்கள். மீதம் உள்ளது
வெளிச்சங்கள், விமர்சனங்கள், விவாதங்கள், விளக்கங்கள்
காலப்பதிவுகள்.

திருப்பூர் கிருஷ்ணன், பிரபஞ்சன் இருவரும் வழங்கியுள்ள சிறப்பான அணிந்துரைகள் இந்தச் சிறுகதைக்கு புதிய வெளிச்சத்தைத் தருகிறது. அதோடு இந்த சிறுகதை தொடர்பாக வந்துள்ள விமர்சனங்கள், விளக்கங்கள் பாரதியை புதிய கோணத்தில் பார்க்க – உதவுகிறது.

தம்பலாவைப் படித்த பின் நமக்குத் தோன்றியது, பாரதி பார்த்தபடியே தான் இந்தச் சமூகம் இன்றும் இருக்கிறது. மாறவில்லை. வெளியீடு-மேன்மை பதிப்பகம்,சென்னை-
044 – 28472058-ரூ 150/-

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top