Close
அக்டோபர் 5, 2024 10:04 மணி

சர்வ தேச யோகா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

யோகா போட்டியில் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்றஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வாழ்த்துகிறார், பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி

யோகா போட்டியில் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்றஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஸ்ரீலங்கா நேசனல் யோகா அசோசியேசன் ஆசியன் யோகா பெடரேஷன் கொழும்பு சிவ விஷ்ணு யோகா பீடம் இணைந்துநடத்திய சர்வதேச யோகா போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங்,அமெரிக்கா  போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
ஆரத்தி எடுத்து வீரர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள்

இதில், இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பா. சஞ்சீத் பாபு, பா. சுர்ஜீத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். சஞ்சீத்பாபு 9-12 வயதினருக்கான யோகா போட்டியில் முதலிடம் பெற்று சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார். மாணவர் சுர்ஜீத் பாபு 6-8 வயதினருக்கான பிரிவில் முதலிடம் பெற்று பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றார்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ லங்கா கல்விஅமைச்சர்  பு. அரவிந்த் குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்திய தூதரக செயலாளர் நவ்யா சிங்லா ஆகியோர் சேம்பியன் பட்டம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை
யோகா போட்டியில் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்கள்

ஸ்ரீலங்கா சென்று சர்வதேச யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று பள்ளிக்கு மாணவர்கள் சஞ்சீத் பாபு மற்றும் சுர்ஜீத் பாபு  ஆகியோர் வந்தனர்.

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி மாணவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாணவ மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்ற  தங்கள் வகுப்புத் தோழர்களை ஆரத்தி எடுத்து பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பள்ளியின் யோகா பயிற்சி ஆசிரியர்கள் ரெ.பாண்டியன் மற்றும் புவனா பாண்டியன் ஆகியோர் ஆசிரியர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கி ணைப்பாளர்கள் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு யொகாவில் சர்வதேச சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top