தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார் கே.ஆர். பெரியகருப்பன். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிராக சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியின் போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீது கடந்த அதிமுக ஆட்சியின் போது 3 வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.ஆர். பெரியகருப்பன் மனு தாக்கல் செய்தார். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக எம்.எல்.ஏ -ஆக உள்ளார். 2006 -ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசில் குடிசை மாற்று வாரிய அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மறைவைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார். இதனையடுத்து 2021 மே மாதம் பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன் பிறகு, ஐ.பெரியசாமியிடம் இந்தத் துறை ஒப்படைக்கப்பட்டு, அவர் வசம் இருந்த கூட்டுறவுத்துறை கேஆர் பெரியகருப்பனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.