நம் முன்னோர்கள் உணவு முறைகளில் மட்டுமல்ல இறைவனை வழிப்பட காட்டி சென்ற சில வழிபாட்டு முறைகளில் ஒன்றான தோப்புக்கரணத்தின் பின்னும் உடலிற்கு வலிமை சேர்க்கும் அறிவியல் ரீதீயான நன்மைகளை மறைத்து வைத்து சென்றுள்ளனர். தோப்புக்கரணம் பற்றி நாம் அறியாத கதைகளும் அறிவியல் காரணங்களும் இதோ! உங்களுக்காக,
இந்துக்கள் விநாயகரை வழிபடும் போது தோப்புக்கரணம் போடுவது வழக்கம். இதற்கு பின் பழங்கதையொன்று மறைந்துள்ளது. அது என்னவெனில் முந்தைய காலத்தில் கஜமுகாசுரன் என்றழைக்கப்படும் அசுரன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவர்களை அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்து துன்புறுத்தினான். “என்னை பார்க்கும் போது பார்த்த இடத்தில் தோப்புக்கரணம் போட வேண்டுமென்ற நிபந்தனையும் விதித்தான்.
தேவர்களுக்கு அவனை எதிர்த்து போரிட முடியாத நிலையின் காரணமாக அவன் கூறிய அனைத்தையும் ஏற்று செய்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் கஜமுகாசுரனின் அட்டூழியங்களை தாங்க முடியவில்லை. இதனால் அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானிடம் தஞ்சம் புகுந்து முறையிட்டனர். விநாயகரும் தேவர்களின் துயரை போக்க முடிவு செய்து கஜமுகாசுரன் முன் சென்று நின்றார்.
கஜமுகாசுரனோ விநாயகரை பார்த்த பின்னும் கர்வம் குறையாது தன்னைப் பார்த்து தோப்புக்கரணம் போடுமாறு பணித்தார். இதைக் கேட்ட விநாயகர் சினம் கொண்டு தனது தந்தத்தினை உடைத்து கஜமுகாசுரனை குத்திக் கொன்றார். அதுவரை கஜமுகாசுரனுக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த தேவர்கள் அன்றிலிருந்து விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட தொடங்கினர். இது தான் இன்று வரை இந்துக்கள் விநாயகரை வழிபடும் போது தாமும் தோப்புக்கரணம் போடக் காரணமாகும்.
நம்மில் சிலருக்கு தோப்புக்கரணம் போடுவதற்கான சரியான முறை தெரியாது. இடது கைை மடக்கி அதன் பெருவிரலினால் வலது காது மடலின் நுனியையும் வலது கையை மடக்கி அதன் பெருவிரலினால் இடது காது மடலின் நுனியையைும் பிடித்துக் கொண்டு முதுகு தண்டு வளையாத படி உட்கார்ந்து எழும்ப வேண்டும். இவ்வாறாக இடது கைப் பெருவிரலால் வலது காது மடல் நுனியையும் வலது கைப் பெருவிரலால் இடது காது மடல் நுனியையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்பும் போது மூளையின் இரு பகுதிகளுக்கும் குருதி ஓட்டம் சீராகி மூளை பலம் பெறுகிறது. கர்ப காலம் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தோப்புக்கரணம் போடக் கூடாது. இவ்வாறாக நாளொன்றிற்கு காலை அல்லது மாலை 15 இலிருந்து 50 வரையான தோப்புக்கரணம் போடலாம்.
இவ்வாறு தினமும் 5நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு வந்தால் மூளைக்கு குருதி ஓட்டம் சீராகச் சென்று, உடல் மற்றும் உள சார்ந்த ஆற்றல் மேம்படும். முதல் தடவை செய்யும் போது தொடர்ந்து 5நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுதல் கடினமான ஓர் காரியமாக தோன்றலாம் ஆகையால் முதல் தடவை செய்பவர்கள் தினமும் ஐந்து தோப்புக்கரணம் போடலாம் நாட்கள் போக போக ஐந்து ஐந்தாக கூட்டிக் கொள்ளலாம்.
வகுப்பில் சில மாணவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். சில மாணவர்களுக்கு எத்தனை முறை படித்தாலும் மனதில் பதிவதில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் ஞாபகசக்தி குறைபாடு தான். இதனை சரி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு தினமும் தோப்புக்கரணம் போடுதல் நல்ல தீர்வாக அமையும். தோப்புக்கரணம் அல்லது வேறு காது நுனி தொடுதல் மாதிரியான பயிற்சிகளினை செய்யும் போது மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு ஞாபக சக்தி அதிகமாகிறது.
உடல் எப்போதும் சோர்வாகவும் சிறு வேலை செய்ததும் களைத்துப் போகும் நபர்கள் தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உடல் புத்துணர்ச்சியும் தாம் செய்யும் செயல்களை ஊக்கத்துடனும் செய்ய தொடங்குவர்.
மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் அவதிபடுபவர்கள் தோப்புகரணம் செய்து வர மனஅமைதியினை வளர்த்துக் கொள்ள முடியும்.
உடல் தசைகள் இறுகி உடல் வலிமைப் பெறும்.
குழந்தைகளின் மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடான ஆட்டிசம் போன்ற மனஅழுத்தம் சம்பந்தமான நோய்கள் தோப்புக்கரணம் போடுவதால் படிப்படியாக குணமடைகின்றன.
மனதினை கட்டுப்பாட்டுடனும் உள்மனதினை சீராக பேணி உள நோய்களுக்கு ஆளாகாதபடி காத்துக் கொள்ளவும் தோப்புக்கரணம் போடுதல் உதவுகிறது.
தொடர்ச்சியாக தோப்புக்கரணம் போட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைவதோடு எப்போதும் விழிப்புடன் செயற்படும்.
அன்று தொடக்கம் இன்று வரை நம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தவறிழைக்கும் மாணவர்களையும் வகுப்பில் பின் தங்கிய மாணவர்களையும் தோப்புக்கரணம் போடச் சொல்வதும் அவர்களது காதை திருகுவதற்கும் காரணம் அவ்வாறு செய்வதால் மூளை விழிப்படைந்து அதன் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதனால் தான்.