Close
செப்டம்பர் 20, 2024 6:37 காலை

பா.ஜ.க.வில் ஐக்கியமா? திருநாவுக்கரசர் எம்.பி. பற்றிய புதிய செய்தி

திருநாவுக்கரசர் எம்பி.

பாரதிய ஜனதாவில் சேரப்போகிறார் என்று பரவிய வதந்திக்கு திருநாவுக்கரசர் எம்பி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக நாளை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜயதரணி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான திருநாவுக்கரசர் எம்.பி.யும் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போகிறார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. திருநாவுக்கரசருக்கு தனது சொந்த காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதாலும், அவருக்கு மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருவதாலும் திருநாவுக்கரசர் இப்படி ஒரு முடிவிற்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வதந்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சியில் நாளை மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ரெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்  தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் நாளை (புதன்கிழமை) காலை 9.50 மணியளவில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து சக்திகரன் அபியான் , சிறுபான்மை பிரிவு, பட்டதாரி அணி, எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, ஓபிசி பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ,மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, கலைப்பிரிவு , மீனவர் அணி, இலக்கிய அணி, ஐஎன்டியுசி அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் பிரிவு ,மனித உரிமை பிரிவு , துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top