சமூகவலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சமீப காலமாக வட மாநிலத்தவர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான வீடியோக்களை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருவதை காணமுடிகிறது.
இது போன்ற வீடியோக்கள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்று தவறான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகின்றனர்.
போலியான செய்திகளை கேட்டும், வீடியோக்களை பார்த்தும் பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் நாமக்கல் மாவட்ட காவல்துறை உதவி எண் 94981-81216 அல்லது 100-க்கு போன் செய்து ஆலோசனை கேட்கலாம். மேலும் உதவிக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையங்களை அனுகி உதவி பெறலாம்.
தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சோசியல் மீடியாக்களில் பரப்பவோ வேண்டாம். அவ்வாறு வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.