அணைக்கட்டு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி சார்பில் செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் அணைக்கட்டு தார்வழி ஸ்ரீவள்ளி முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அணைக்கட்டு தொகுதி மாவட்ட செயலாளர் ஏ.ஜி.முருகானந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள் கலந்துக்கொண்டு பேசுகையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவரும் ஏ.சி.எஸ் சண்முகமாக நினைத்து கட்சி பணியாற்றி, என்னை வெற்றி பெற செய்திட வேண்டும்.
அணைக்கட்டு தொகுதி முழுக்க தாமரை சின்னத்தை சுவர் விளம்பரங்களின் பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அணைக்கட்டு தொகுதியில் அனைத்து குடிசை வீடுகளும், கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும். குடிசைகளே இல்லாத தொகுதியாக மாற்றப்படும். மேலும், தொரப்பாடி பகுதியில் ஏசிஎஸ் பெயரில் இலவச திருமண மண்டபம், மருத்துவ முகாம் மையம், வேலை வாய்ப்பு பயிற்சி மையம் கட்டித்தரப்பட்டு தொகுதி மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.
அதேபோல, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம், விளையாட்டு திடல் அமைத்து தரப்படும் எனவும், இதுபோன்று பல்வேறு திட்டங்கள் உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், வேலூர் மாவட்ட தலைவர் ஜி.பி.கே.பாலாஜி, மாநில அமைப்புச் செயலாளர் பூவை ரவி, வேலூர் மாவட்ட செயலாளர் பரத், வேலூர் நகர செயலாளர் குமரகுரு, அரியூர் பாபு, ஏ.ஜி.விஜயன், மருதுபாண்டியர், பேரவை செயலாளர் சௌந்தரராஜன், வேலூர் மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேலூர் – சசிகுமார்