Close
நவம்பர் 22, 2024 4:04 காலை

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 80 ரூபாய் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக 100 ரூபாயை தாண்டியது. அதன் பின்னர் மத்திய அரசு, மாநில அரசுகள் நினைத்தால் கலால் வரியில் குறைத்துக் கொள்ளலாம் என அறிவித்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 102.63 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94.24 காசுக்கும் விற்கப்பட்டு வந்தது .இந்த விலையானது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நிலையாக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பெட்ரோல் விலையில் பைசா கணக்கில் மாற்றம் செய்வது உண்டு. ஆனாலும் பெரிய அளவில் குறைக்கப்படவில்லை .நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு பத்து  ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைத்களத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு இருப்பது நுகர்வோர் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும் எதிர்பார்க்கப்பட்ட குறைப்பு இல்லை என்பது ஒரு வகையில் அவர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top