Close
நவம்பர் 22, 2024 12:58 காலை

மக்களவைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மக்கள் அதிகாரம்  அமைப்பினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெறுவுள்ள மக்களவைத்தேர்தலில் முறைகேட்டிற்கு வழி வகுக்கின்ற  மின்னணு வாக்குப்பதிவு முறையைத் தடை செய்ய வேண்டும். மீண்டும்  வாக்குச்சீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில்  மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

தஞ்சாவூரில்  பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். மாநில பொருளாளர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசியதாவது:

பாரதிய ஜனதாக் கட்சி மூன்றாவது முறையாக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகளை உடைப்பது பல கட்சிகளை மிரட்டித் தன் பக்கம் சேர்த்துக் கொள்வது, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவது என பல்வேறு சட்ட விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை உலகமே அறியும்.

பாரதிய ஜனதாக் கட்சி தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தாது என்பது உறுதி. மிகப் பெரிய அளவுக்கு வெளிப்படையாகவே முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்பது சண்டிகர் மேயர் தேர்தலில் தெளிவாகிவிட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்து இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தகைய முறைகேடுகளையும் செய்ய முடியும் என்பதைப் பல வல்லுனர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

மேலும் விவி பேட் என்று சொல்லப்படும் வாக்குப்பதிவை காட்டும் ரசீதிலும் மோசடி செய்ய முடியும் என்பதை பல வல்லுனர்கள் நேரடியாக விளக்கிக் காட்டி இருக்கிறார்கள். இதுகுறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் தொழில்நுட்ப ஆலோசகரான  பொன்ராஜ்  மிக விரிவாக இது பற்றி விளக்கியிருக்கிறார்.

இந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தகைய முறைகேடுகளையும் செய்ய முடியும் என்பதை அவர் நேரடியாக செய்து காண்பித்து இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தொடர்ந்து இக்குற்ற சாட்டை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார்.

உலகில் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவோ ஜப்பானோ எந்த நாடும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்திய பிரிட்டன் போன்ற நாடுகள் அவற்றை கைவிட்டு விட்டன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் நேர்மையான வெளிப்படையான வாக்காளரின் தேர்வை உத்தரவாதம் செய்வதற்கு எந்த வாய்ப்பு இல்லாத இந்த வாக்குப்பதிவு எந்திரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களை முற்றிலும் நிறுத்திவிட்டு வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்துவதில் எந்த பெரிய சிக்கலும் இல்லை. எனவே இந்தக் கோரிக்கையை இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எழுப்ப வேண்டும்.

தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் நடைபெற்றால் அதில் நிச்சயமாக பிஜேபி எல்லா விதமான தில்லுகளையும் மோசடிகளையும் செய்யும் என்பது உறுதி. எனவே நாட்டை மதவெறி பாசிச படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கும் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளு டைய ஒற்றுமை மட்டும் போதாது. இந்த மோசடிக்கு வழிகோலும் வாக்குப்பதிவு எந்திரத்தை நிறுத்திவிட்டு வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாம் அனைவரும் போராட வேண்டும் என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழக இணைச் செயலாளர் ராவணன், மாநகர செயலாளர் எழுத்தாளர் சாம்பான்,இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைத்தலைவர் எம்.பி.நாத்திகன், ஆட்டோ சங்க பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், மக்கள் அதிகாரம் நிர்வாகி ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில் மாவட்ட தலைவர் அருள் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top