Close
நவம்பர் 24, 2024 2:30 காலை

புத்தகம் அறிவோம்…தன்னார்வ செயல்பாடும் காந்திய அணுகுமுறையும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

2012 ஆண்டு கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீரமானத்தின்படி 2013 ஆண்டு முதல், வனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த  உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிப்கோ(Chipko) என்ற இந்தி மொழிச் சொல்லுக்கு “உறுதியாக பற்றிக் கொள்ளுதல் அல்லது தழுவிக் கொள்ளுதல்” என்று பொருள். சில மனிதர்கள் தங்கள் கோடாரிகளோடு மரங்களை வெட்ட வந்த போது, வட இந்தியாவின் இமய மலைப்பகுதியில் வாழும் கிராமத்துப் பெண்கள் மரங்களைத் தழுவிக் கொண்டு அவர்களை நோக்கி “மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டோம். முதலில் எங்களை வெட்டுங்கள். பிறகு மரங்களை வெட்டிக் கொள்ளுங்கள்” என்று கூறினர்.

இப்படிப்பட்ட செயலால் இவ்வியக்கம் ‘சிப்கோ ‘ என்று பெயர் பெற்றது. இந்தப் பெண்கள் உயிரையே இழக்கவும் தயாராக இருந்தனர். தங்கள் கிராமங்களில் மரங்களை வெட்டி வீழ்த்த அனுமதிக்கவில்லை. பொதுவாக அறியாமை நிறைந்தவர்களாகவும் சக்தியற்றவர்களாகவும் இருப்பர் என்றும் பொதுவாழ்வில் எவ்வித பணியும் ஆற்ற இயலாதவர்கள் என்று கருதப்பட்ட பெண்கள் சிப்கோ இயக்கத்தில் ஈடுபட்டனர். இப்படிப்பட்ட துணிச்சலும் உறுதியும் கொண்ட ஆனால் படிப்பறிவில்லாத எழைப் பெண்களால் சிப்கோ இயக்கம் தோன்றியது(பக். 18 – 19).

குஜராத்தில் பிறந்து, இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.கே. ஓசா எழுதிய ஆய்வு நூல் தான் தன்னார்வ செயல்பாடும் காந்திய அணுகுமுறையும் .இவர் தமிழகத்தில் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி இருக்கிறார். காந்திய செயல்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்.

காந்திய செயல்முறையை பயன்படுத்தி வெற்றி கண்ட மூன்று இயக்கங்களை – சிப்கோ , தொழுநோய் ஒழிப்பிற்காக பாடுபடும் பாபா ஆம்தேயின் ‘ஆனந்தவனம்’, சுரண்டப்படும் பெண் தொழிலாளர்களுக்காக போராடும் திருமதி இலாபட் அமைத்த ‘சேவா’ தொண்டு நிறுவனம் – பற்றி பேசும் நூல் இது.

காந்தியின் வாழ்க்கை வரலாறு, செயல்பாடுகளை விவரித்து, காந்திய செயல்பாடுகளை எப்படி இந்த இயக்கங்கள் பயன்படுத்தி வெற்றி கண்டன என்பது இந்த நூலின் மையம்.

சிப்கோ இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் கெளரா தேவி என்ற பெண்மணி. அவர் தான், 1974 ல், தன் ரென்னி கிராமத்தில் இருந்த மரங்களை வெட்ட வந்த போது, கிராமத்தில் இருந்த பெண்களை எல்லாம் திரட்டி, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மரங்களை கட்டிக் கொள்ளச் செய்து, “மரங்களை வெட்டவே முடியாது. எங்களை வெட்டிய பின்னரே இம்மரங்களை வெட்ட வேண்டும்” என்று உறுதிபட சொல்லச் செய்தவர். மரங்களைக் காத்தவர்.

சிப்கோ இயக்கம் இப்படித்தான் தொடங்கியது. இதற்கு முழுவடிவம் கொடுத்தவர் பாபா ஆம்தே.இதே போன்று, 1978 ல் வெட்ட வேண்டுமென்று குறிவைத்திருந்த மரங்களைச் சுற்றிப் பெண்கள் மங்கள நாணைக் கட்டிவிட்டனர்.(அண்மையில் புதுக்கோட்டையில், மரம் நண்பர்கள், அதே போன்று குறி வைக்கப்பட்ட மரங்களில் மஞ்சள் துணியைக் கட்டி மஞ்சள் குங்குமத்தை பூசி வைத்திருக்கின்றனர்)
ஆனால் சிப்கோ இயக்கத்தினர் ஒரு போதும் இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.

இன்று பசுமை தேசம் பேசும் பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் கோரிக்கைக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தது தமிழகத்தில் நடந்த ஒரு கொடுமையான நிகழ்வு.ஆசிரியர் தெளிவாக ஒன்றைச் சொல்கிறார் காந்தியம் எல்லாக்காலத்துக்குமானது.வெளியீடு-நேஷனல் புக் டிரஸ்ட், புது டெல்லி . விலை-ரூ.22.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top