Close
நவம்பர் 21, 2024 10:24 மணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், நாளை நடைபெறுகிறது.
முன்னதாக, நாளைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 10 மணியில் இருந்து 11.45 மணிக்குள் சுவாமி கருவறையில் மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது.
இதையடுத்து மாலை 6 மணிக்கு உற்ஸவர் ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள், குமரக்கோயிலில் இருந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்தடைகிறார். இரவு 8 மணிக்கு பெரிய நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
பிறகு, இரவு 11 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு மாலை மாற்றி திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படியும், செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், புதன்கிழமை திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை ஊஞ்சல் உற்ஸவ நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top