குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் நடந்தது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்கள் பொதுமக்களுடன் உறுதிமொழியை மேற்கொண்டனர்.
பின்னர், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நரிக்குறவர் மக்களிடம் அனைவருக்கும் ஓட்டுரிமை, அடையாள அட்டை இருக்கிறதா என்றும், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி, 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாக்கம் ஊராட்சியை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண் 22, 23, 24 ஆகிய வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் யு.நாகராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுபலட்சுமி (குடியாத்தம்), சுமதி (கீ.வ குப்பம்), மாவட்டஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், வட்டாட்சியர் சித்ரா தேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.