Close
நவம்பர் 23, 2024 10:15 மணி

புத்தகம் அறிவோம்.. எப்படி வாழ வேண்டும்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எப்படி வாழ வேண்டும்

கவிஞன்:புகழுடன் வாழவிரும்பும் கவிஞன் இளமையிலிருந்து நல்ல நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். பழமையாயுள்ள இதிகாச புராணங்களென்ன, காவிய நாடகங்களென்ன, சங்கீதம், சிற்பம், நாட்டியம் முதலிய நுண்கலைகளென்ன. இப்படி பலவற்றிலும் தேர்ச்சி பெறவேண்டும். உலக விவகாரங்களிலும் நல்ல பரிச்சயம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களிலும் புலமை பெற வேண்டும். கவிதை இலக்கண வரம்பிற்குட்படாதது என்று சொல்லிக் கொண்டு இலக்கணத்தை புறக்கணிக்கக்கூடாது.(பக். 16-17)

ஆசிரியன்:நீ தன்மதிப்புடைய வனாயிருக்க வேண்டுமானால், அதற்காக உன்னை எல்லோரும் மதிக்க வேண்டுமானால், நீ ஒழுக்கமுடையவனாயிருக்க வேண்டும்.
ஒழுக்கத்தினின்று பிறப்பதுதான் தன் மதிப்பு. ஒழுக்கம் இன்றேல் மதிப்பில்லை. செல்லாக் காசுதான்(பக். 70).

அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் “எப்படி வாழவேண்டும்?”,1955 ல் முதல் பதிப்பாகவும், 1959 ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. தற்போது 64 ஆண்களுக்கு பிறகு மீள் பதிப்பாக 2024ல் வெளிவருகிறது. 69 ஆண்டுகளைக் கடந்தும் சர்மாவின் எழுத்து உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே இந்த நூலின் சிறப்பு.

சர்மா,சமுதாயத்திற்கு இன்றியமையாதவர்களாகக் கருதிய,
கவிஞன்
ஓவியன்
நடிகன்
ஆசிரியன் (பத்திரிகைஆசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்)
வைத்தியன்
வியாபாரி
உத்தியோகஸ்தன்
விவசாயி
என்று எட்டு பேரை குறிப்பிட்டு அவர்கள் யார்? எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். சமூகத்தில் ஒவ்வொருவரின் முக்கியத்துவம், அதனால் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்கள் இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே பேசுகிறார் சர்மா. அதே நேரத்தில் எல்லோரிடமும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளாக குறிப்பிடுவது, ஒழுங்கு,ஒழுக்கம்.

” ஒவ்வொருவரைப் பற்றியும் பிரஸ்தாபிக்கிற போதும், ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் வற்புறுத்தி வந்திருக்கிறேன். தனிமனிதனிடத்திலும், சமுதாயத்தியத்திலும் இவ்விரண்டு பண்புகளும் போற்றி வளர்க்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், தனி மனிதன் இரண்டு கால பிராணியாகவும், சமுதாயம் கீழான உணர்ச்சிகளின் விளையாட்டு மைதானமாகவும் மாறிவிடுதல் திண்ணம்…. சுதந்திர இந்தியாவே இதை நினைவில் வைத்துக் கொள்” என்கிறார் சர்மா நூலின் முன்னுரையில்.. பவித்ரா பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர்.9940985920.

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top