வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அவர்களை ஆதரத்து நடிகை குஷ்பூ குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவே அடிக்கடி தமிழகம் வருகிறார். இதுவரையில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.2,75,000 கோடி நிதி வழங்கியுள்ளார்.
ஆனால், கடந்த 3 ஆண்டு காலமாக தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், வளர்ச்சியடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தமிழகத்தில் பால், தயிர், சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவை மீதான வரி உயர்ந்துள்ளது. அதேபோல, ஊழலிலும், கடனிலும் தமிழகம் வளர்ந்துள்ளது. இதுவரையில் மக்களுக்காக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை.
தமிழகத்தில் புயல், மழை பாதிப்பிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆகவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏ.சி.சண்முகம் அவர்களை வெற்றி பெற வைத்தால், நீங்கள் அனுப்புவது மக்களவை உறுப்பினர் மட்டுமல்ல, மத்திய அமைச்சராக திரும்ப வருவார்.
ஏற்கெனவே, வேலூர் தொகுதியில் மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 14,500 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார் எனக் கூறினார்.
இந்த கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி செயல் தலைவர் அருண்குமார், ரவிக்குமார், புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர்.பி.செந்தில், நகர செயலாளர் எஸ்.ரமேஷ், பாமக நகர செயலாளர் குமார், நகர தலைவர் தண்டபாணி, பாஜக நகர தலைவர் சாய் ஆனந்தன், நகர செயலாளர் குமரவேல், அமமுக மாவட்ட செயலாளர் சதீஷ், நகர செயலாளர் சங்கர், தமாகா மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், நகர தலைவர் ஜே.தினகரன், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கோதண்டன் மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.