Close
நவம்பர் 21, 2024 3:24 மணி

புத்தகம் அறிவோம்.. மானுடத்தாகம்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மானுடத்தாகம்

“திறக்கப்படாத ஜன்னல்களோடும், தீர்க்கப்படாத இன்னல்களோடும், காயங்களை ஆறவிடாமல் கதறவிட்ட கொடியவர்களோடும், பொதுப்பணியில் தங்களைப் பொருத்திக் கொண்டும், வரும் தலைமுறைக்காக தங்களை வருத்திக் கொண்டும், மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும் மாமனிதர்களின் இந்த புனிதப் பூமியை மூச்சிருக்கும் வரை முத்தமிட்டு காப்போம். சுதந்திரத்தை எவரும் கட்டிக் கொடுக்கவில்லை. செந்நீரை கொட்டிக் கொடுத்ததினால்தான் இது சாத்தியமாயிற்று. கொடிபிடித்து கோஷம் போடுவதால் மட்டும் வரவில்லை. கொண்ட கொள்கையில் கடைசிவரையில் கொலைக்களத்துக்கு கொண்டு போனாலும் பரவாயில்லை என்றவர்களால் வந்த சுதந்திரம் இது(பக். 13).

“தியாகத்திற்கு தயாராக இருப்பவன் தலைவன். தொண்டு செய்வதற்கு துடிப்பவன்தான் தலைவன். மகிழ்ச்சியையும், மனக் கஷ்டங்களையும் பங்கு போட்டுக் கொள்ள தயாராக இருப்பவன் தான் தலைவன். மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடத் தயாராக இருக்கக் கூடிய தலைவன் என்றுமே மக்கள் மனதில் வைத்துப் போற்றப்படுவான். அப்படிப்பட்ட தலைவர்களை மக்கள் அடையாளம் காணும்போதுதான் அல்லல்படாமல் இருப்பார்கள்(பக். 106).

“ஆசிரியர் என்பவர் வாழ்க்கைப் பயணத்துக்கு வரைபடம் தயாரிக்க உதவுபவர். பாடாய்படுத்தினாலும் பரவாயில்லை மாணவர்கள் பாழாய்ப் போய்விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பவர். பாடப்புத்தகங்களுக்குள் புதைந்து விடாமல், விசாலமான உலகத்தில் விதைத்து விடுங்கள் அவர்களாகவே முளைத்து எழுவார்கள் என்ற இலக்கணத்துக்கு சொந்தக்காரர் ஆசிரியர். பாடப்புத்தகம் தாண்டி பார்வையைத்திருப்பவும், வட்டத்தைத் தாண்டி பார்வையைத்திருப்பவும் உதவுபவர் ஆசிரியர். கண்டிப்பிலும் கணிவிலும், முதிர்ந்த பழமாய், அறிவுச் செரிவோடு அடக்கமாய் இருப்பவர். அன்பான ஆசான். அகிலத்தில் ஆகச் சிறந்த ஆசான்(பக்.163 – 164).

ஆசிரியர் பி. ஆண்டனி சமூக அக்கறை கொண்ட பேராசான் . புதுக்கோட்டையில் எல்லோரையும் ஆங்கிலத்தில் பேச வைத்து விட வேண்டும் என்பதற்காக கால் நூற்றுக்கு மேலாக கோடை காலத்தில் இலவச ஆங்கில – Spoken English – வகுப்பு நடத்தி வருபவர். சுற்றுச்சூழலை மேம்படுத்த “பச்சை பூமி” அமைப்பின் மூலம் புதுகையை பசுமையாக்க முயற்சிக்கிறார். அதேபோல சமூக மேன்மைக்கான தனது தாகத்தை மானுட தாகமாக மாற்றி 35 கட்டுரைகளாக ” மானுட தாகம்” நூலில் நமக்குத் தந்திருக்கிறார்.

இது கவிதை நூலா? இல்லை கட்டுரை நூலா? கவிதையை விரும்புபவர்கள் கவிதை நூலாக வாசிக்கலாம். கட்டுரையாக நினைப்பவர்கள் கட்டுரையாக வாசிக்கலாம்.

இதில் உள்ள கட்டுரைகள் யாவும் சமூக மேன்மைக்கானது.
தேசப்பற்று,
அகங்காரத்தின் விளைவு,
பாட முறை மாற்றம்,
நம்பிக்கை,
முயற்சி,
ஜனநாயகத்தின் பயன், கோபம்,
தாய், தந்தை பேணல்,
புத்தகம்,
தலைமைப் பண்பு,
பாரதி,
உடற்பயிற்சி,
வாழ்க்கை பயனுற ,
சகிப்புத்தன்மை,
ஆசிரியர் பணி,
கலாம்,
காமராஜர்,
நெல்சன் மண்டேலா,
என்று தலைவர்களின் உன்னத குணங்களையும், தனி மனித மேன்மைக்கு தேவையான நற்குணங்களையும், சமூக வளர்ச்சிக்குத் தேவையான உயர்ந்த பண்புகளையும் , அழகுற சொல் மாலையாக நமக்குத் தொகுத்து தந்திருக்கிறார் ஆண்டனி.

பேராசிரியர் என்.ஸ்ரீதரன் எழுதுவார், “செய்தித்தாள் என்றால் ஒன்று போதும். அதை முழுமையாகப் படிங்கள். தன்னம்பிக்கை நூல் என்றால் ஒன்று போதும். அதில் நல்லதாகத் தேர்ந்தெடுத்து, வாசித்து, அதில் உள்ளதைச் செயல்படுத்துங்கள் போதும் “என்பார். அந்த நல்ல நூலில் ஒன்று “மானுட தாகம். ” Pustaka,7418555884. ரூ.210/-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top