Close
நவம்பர் 22, 2024 12:33 காலை

ஆகச்சிறந்த மேதைகள் புரட்சியாளர்கள் மீட்டு தந்த(மே.1) உழைப்பாளர்கள் தினம்…

இங்கிலாந்து சங்கர்

உலக உழைப்பாளர் தினம்

உழைப்பாளர்கள் உரிமைகள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்த வண்ணம், இன்னொரு “மே தினத்தை” எதிர் நோக்குகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தொழிலாளர் சட்டங்களில் மற்றொரு பார்வையை எடுக்க, கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவாமல் ஒரு மூலையில் கிடப்பில் போடப்பட்டிருப்பது சோகமான விஷயம். இதில் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு ஒரு எளிய மற்றும் எச்சரிக்கையான தொடக்கத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் தொழிலாளர் சட்டங்கள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உலகில் போக்குவரத்து விதிகள் தான் அதிகமாக மீறப்படுவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது அல்ல தொழிலாளர்கள் விதிகள் தான் என்பதையறியாமலேயே உழைக்கும் வர்க்கம் ஒருபக்கம் உழைத்துக் கொண்டிருக்கிறது, மறுபக்கம் மேதின வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறது முதலாளி வர்க்கம்..

எட்டு மணி நேரம் உழைப்பு என்ற அரசியல் கோரிக்கை முன்வைக்கப் பட்டு நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட இன்றைய நிலையில், இந்தக் கோரிக்கைகள் பல நாடுகளில் இதுவரை அமல் செய்யப்படவில்லை. எட்டுமணி நேர உழைப்பு என்ற கோரிக்கை முன்வைத்து வென்ற நாடுகளில், இன்று தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து இது மீண்டும் பறிக்கப்படுகின்றது. அதிகரித்த வேலை நேரம் புகுத்தப்படுகின்றது.

இதைச் சட்டம் மூலம், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குவதன் மூலம், மேலதிக வேலையை திணிப்பதன் மூலம், எட்டுமணி நேரம் உழைப்பு படிப்படியாக இல்லாது ஒழிக்கின்ற பணியையே, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக சிறு முதலாளிகள் தொடங்கி பெரு முதலாளிகள் வரை செய்கின்றனர்.

தொழிலாளி வர்க்கத்தின் மிக மோசமான வாழ்வை மேலும் சீரழித்து, உழைப்பின் திறன் பிழியப்பட்டு, வாழ்வின் சகல அடிப்படையையும் தகர்க்கின்ற வகையில் முதலாளித்துவம் மிகவும் கோர முகமெடுத்து நிற்கின்ற தனது உரிமையைத் தான் ஜனநாயகம் என்கின்றது. தனது சுதந்திரம் என்கின்றது. இதைத் தான் மக்கள் ஆட்சி என்கின்றது.

ஆனால் தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கையையும், தான் பெற்றதைப் பாதுகாக்கும் போராட்டத்தையும், இழந்த உரிமைகளை மீளப் பெறவும் மே நாளில் மீண்டும் மீண்டும் அரசியல் உணர்வுடன் போராடுகின்றது. இந்த நாளில் நாம் நமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம். “வசதிப்படைத்தவன் தரமாட்டான் – வயிறு பசித்தவன் விட மாட்டான் “

# திருச்சியிலிருந்து (இங்கிலாந்து) சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top