Close
நவம்பர் 22, 2024 1:52 காலை

அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்படுமா?

அண்ணாமலையார் கோவில் சிவகங்கை தீர்த்தம்

நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ள அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம், ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும்.
அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம். உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும்.
ஆடிப்பூர விழா
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த கடந்த மாதம் 29ஆம் தேதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் விநாயகர் பராசக்தி அம்மன் பல்வேறு வாகனங்களில் மாடவிதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நாளை ஆடிப்பூரமன்று காலையில் அண்ணாமலையார் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் நாளை இரவு தீமிதி விழா நடைபெறும் .
அம்பாள் தீர்த்தவாரி நடைபெற உள்ள சிவகங்கை குளத்தின் அசுத்தமான நிலை.
இந்நிலையில் நாளை காலை அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ள சிவகங்கை குளம் முறையான பராமரிப்பு இன்றி பாசி படர்ந்து நீர் மாசடைந்துள்ளது . பாசியை அகற்றி குளத்தை நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குள் சுத்தமாக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் தரும் உண்டியல் காணிக்கையாக மூன்று கோடி ரூபாய்க்கு மேல் பெறும் அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top