அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட ஐந்தாண்டுகள் தடைவிதித்து, செபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடன்கள் ஒப்புதல் வழங்குவதில் விதிமீறல்கள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து செபி தீவிர விசாரணை மேற்கொண்டது.
இதில், அனில் அம்பானி மற்றும் அவரது முக்கிய கூட்டாளிகள் பல்வேறு நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது என்று செபி கூறியுள்ளது.
இது குறித்து செபி தனது உத்தரவில் கூறியதாவது: கடன் என்ற பெயரில் அனில் அம்பானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக நிதி வழங்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமா விதிமீறல். எனவே இதற்கு தண்டனையாக அனில் அம்பானி, அவரது நிறுவனத்தின் மூன்று முக்கிய உயரதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள், ஐந்தாண்டுகளுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து இத்தடை அமலுக்கு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் அம்பானி உள்ளிட்ட நபர்களும், குறிப்பிட்ட நிறுவனங்களும் பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது. மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம், மோசடி திட்டத்தை அனில் அம்பானி செயல்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக, அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் செபி தனது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.