Close
நவம்பர் 23, 2024 12:11 மணி

வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறி 3 மாநில போலீசாரை திக்குமுக்காட வைத்த சிறுமி

கேரளாவில் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமியை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் பின் தொடர்ந்து, இறுதியாக விசாகப்பட்டினத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவருடைய மகளை, அதே பகுதியில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டனர். ஆக. 20 அன்று பள்ளியில் சேர்ப்பதற்காக அவரது தாய் காலையில் எழுப்பிய போது, அவர் எழாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய், சிறுமியைக் கண்டித்து உள்ளார்.

பின்னர், அவர் வேலைக்குச் சென்று மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து சிறுமி காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில்  புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து அசாம் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அந்த ரயில் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பின்னர், கேரள மாநில காவல்துறையினர்,  தமிழ்நாடு ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ரயில்வே காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த சிறுமி மற்றொரு ரயிலில் ஏறி விசாகப்பட்டினம் சென்றது தெரியவந்தது. பின்னர் தனிப்படை காவல்துறையினர் விசாகப்பட்டினம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து சிறுமியை சென்னை அழைத்து வந்த ரயில்வே காவல்துறையினர் , கேரள மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top