Close
ஏப்ரல் 4, 2025 10:12 மணி

பவா செல்லத்துரையின் இலங்கை பயணத்தில் கண்ட மலையக தமிழர்களுடனான அனுபவம்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மலையகத்தமிழர்களுடன் எழுத்தாளர் பவா செல்லத்துரை உரையாடல்

 இலண்டன் வெம்ப்ளி நகரில் மலையகம் 2001, ஓவியக்காட்சி மற்றும் பவா செல்லத்துரையின் இலங்கை பயணத்தில் கண்ட மலையக தமிழர்களுடான அனுபவம் குறித்த  உரையாடல் நிகழ்வு  (15.09.2024) நடைபெற்றது.

இலங்கைக்கு தொழில் நிமித்தமாக அழைத்து வரப்பட்டமலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இலங்கை, தமிழகம் மற்றும் தமிழ் சமூகம் வாழும் இன்னும் பிற தேசங்களில்,  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினைநினைவு கூறும் நிகழ்வுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் நீட்சியாக இதுபோன்ற மலையகம் குறித்த ஓவியக் கண்காட்சி, கலை நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் மலையக மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு நிகழ்த்தப்படுவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என எதிர்பார்ப்போம்.

சமீப காலங்களில் இலக்கிய படைப்பாளிகள், வாசகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என யாரைச் சந்தித்தாலும்… சோளகர் தொட்டில் நாவலை வாசித்தீர்களா…? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. பவா செல்லத்துரை  மலையக மக்களின் இன்றைய நாளிலும் இருக்கிற நிலையை உருக்கமாக பேசுகிற போது, இந்த நாவலின் கருப்பொருளை ஒப்புமைப்படுத்திஉரையாடியது மிக பொருத்தமாக இருந்தது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அரசு இயந்திரங்களின் கொடூர அடக்குமுறையால், சமூகம் சந்தித்த பல நிகழ்வுகளால், தங்கள் வாழ்வை நேசித்த மண்ணைத் தொலைத்தவர்கள் என்பதற்கு சாட்சியாக அமைந்த அந்த புதினம், ஈழப்போர் நடந்த போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளையும் நினைவில் கொள்ள வைத்தது.

வரலாற்றில் நிலத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் நடைபெறும் எல்லா யுத்தங்களிலும் எப்போதும் பாதிக்கப்பட்டு நசுக்கப்படுவது அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் பங்கேற்காத/கட்டாயத்தின் பெயரால் மாத்திரமே பங்கேற்ற அப்பாவி மக்களே என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நம்முள் பதிய வைத்தது, அரங்கத்தில் இன்று நடந்த உரையாடல்கள்.

மலையக மக்களின் சமூக பொருளாதார அரசியல் பிரச்னைகளை தீவிர ஆய்வக்குட்படுத்துவதற்கும் அப்பிரச்னைகளுக்கான தீர்வுகளை
அடையாளம் காண்பதற்கும், சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மத்தியில் எடுத்து செல்வதற்கும் இதுப்போன்ற நிகழ்வுகள் பெரிதும் உதவும் என நம்புகிறேன். கூடவே மலையக மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக பொருளாதார நிலை மற்றும் அரசியல் போன்றவற்றில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விஷயங்களைவெளிக்கொணர்ந்து ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என நம்புவோமாக.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top