Close
மே 12, 2024 9:03 மணி

 பிப்ரவரி 29, 2024 – லீப் வருடம்.. அதாவது மிகுநாள் ஆண்டு..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பிப்ரவரி 29 லீப் வருடம்-

கிறிஸ்து பிறப்பதற்கு நூறு ஆண்டுகள் முன்பு வரை, ஆண்டுகள் என்னும் கணக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் வருவதைக்கண்டே, ஆண்டுக்கணக்கு என்னும் வளையத்தின் இன்றியமையாமை மக்களால் அறியப்பட்டது.

ஆண்டுக்கணக்கு என்பது ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லீப் ஆண்டிற்கான தோற்றம் கிமு 45 -இல் லீப் ஆண்டின் தந்தை ஜூலியஸ் சீசரிடமிருந்து வந்தது.பதினாறாம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகத்தின் போது தான், ஆண்டுக்கு முந்நூற்றறுபத்தைந்தேகால் நாள் என்பதே அறிமுகமானது.இந்த கால் நாளை ஆண்டுதோறும் கணக்கில் எடுத்துக் கொள்வதை விட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை முந்நூற்றறுபத்து ஆறு நாட்கள் எனக்கொள்வது எளிதானது. இது தான் லீப் ஆண்டு அறிமுகமான வரலாறு.

சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையில் ஒத்திசைக்க உதவும் நாள்காட்டியில் சேர்க்கப்படும் கூடுதல் நாள் லீப் டே ஆகும். நமது நாட்காட்டியை வானியல் பருவங்களுடன் சீரமைக்க அவை அவசியம்.

பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நாட்கள் 365 1/4. இதில் 365 நாட்களை நாம் ஓராண்டாக எடுத்துக் கொள்கிறோம். எஞ்சிய 1/4 நாட்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்களாக கணக்கில் கொண்டு அந்த நாளை பிப்ரவரி மாதத்தில் சேர்த்து ஆண்டுக்கு 366 நாட்கள் என் கணக்கிடுகிறோம்.
இந்த வருடத்தை தான் லீப் ஆண்டு என்கிறோம். உதாரணத்திற்கு 2004, 2008, 2012, 2016, 2020. மற்றும் 2024 -ம் ஆண்டுகளில் வரும் பிப்ரவரியில் தான் 29 நாட்கள் வரும்.
இந்த மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமல், நாட்காட்டிகளுக்கு இடையே உள்ள சுமார் ஆறு மணிநேரத்தைக் கணக்கில் எடுக்காமல் இருந்தால், பருவ காலங்கள் தடம் மாறிவிடும்.

உதாரணமாக, சுமார் 700 ஆண்டுகளுக்கு பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் ஜூன் மாதத்திற்குப் பதிலாக டிசம்பரில் தொடங்கும். நாம் மிகுநாள் ஆண்டுக ளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் ஒரு கட்டத்தில் ஜூன் மாதத்தில் குளிர்காலம் நிலவும், அதே நேரத்தில் தெற்கு அரைக்கோளத்தில் கோடை காலம் நிலவும்.

இங்கிலாந்தில், பிப்ரவரி 29 அன்று, பெண்கள் தாங்கள் திருமணம் புரிய விரும்பும் ஆண்களிடம், இன்றைய நாளில் விருப்பத்தை முன்மொழியலாம் என்கிற வழக்கம் இருந்தது.முன்மொழிவது ஆணின் பங்கு என்ற கருத்து காலாவதியானது என்றாலும், பலர் இன்னும் அந்த பாரம்பரியத்தை பின்பற்றி தேர்வு செய்கிறார்கள்.

மூடநம்பிக்கையின் படி, ஒரு லீப் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் ஒரு லீப் ஆண்டில் விவாகரத்து செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைக் காண மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பல தேசங்களில் பல விதமான மிகுநாள் ஆண்டுடன் தொடர்புடைய பல பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் பல இருந்தன. அவற்றில் சில மட்டும் உயிர்ப்புடன் உள்ளன.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top