விளாம்பழம் நமக்கு அறிமுகம் ஆனது விநாயகர் சதுர்த்தி அன்று தான். பூரண கொழுக்கட்டை, பொரி கடலை அவலுடன் பழங்களும் பிள்ளையாருக்கு படைப்போம். எல்லா பண்டங்களும் இருநாட்களுக்குள் காலியாகி விடும். மூன்றாம் நாள் வரை யாரும் கேட்பாரற்று கிடப்பது இந்த விளாம்பழம் மட்டுமே.
இது எப்படி சாப்பிடறதுன்னு நமக்கு அப்ப தெரியாது..விளாம்பழத்தை உடைத்து, உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து சர்க்கரை போட்டு பிசைந்து சாப்பிடணும். மிகவும் ருசியாக இருக்கும்.
விளா மரத்தின் தாவர அறிவியல் பெயர் பெரோனியா எலிபண்டம் (Feronia Elephantum). ஆங்கிலத்தில் Wood Apple என்பார்கள். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தைவான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டது. தற்போது அரிதாகிக் கொண்டு வருகிறது.
விளாம்பழத்தில் இரண்டு சுவராஸ்யம் உண்டு.
ஒன்று..யானையிடம் விளாம்பழம் சாப்பிடக் கொடுத்தால் ஓடுமட்டும் வெளியே வருமாம். எப்படி பழத்தை உடைக்காமல் உள்ளே உள்ள சதையை மட்டும் சாப்பிடுகிறது என்பது நமக்கு இன்றுவரை ஆச்சர்யம்?!
இன்னொன்று.. விளாம்பழம் பற்றி ஒரு பழமொழி சொல்லுவாங்க,
விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட..விளாம்பழத்தை ஒட்டோடு இருபத்தியொருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை அற்று போகுமாம்.
நாம ஓட்டோடு ஒரு பழம் சாப்பிட்டாச்சு இன்னும் இருபது பழங்களுக்கு எங்கே போவது?! 😀
#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#